உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்: ஐகோர்ட் கேள்வி
உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்: ஐகோர்ட் கேள்வி
உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூன் 12, 2024 12:56 AM
சென்னை:'உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புகளை வெளியிடக்கூடாது' என, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை ஆவணப்படுத்த வேண்டும்; தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி விபரங்களை வழங்க வேண்டும்; வெளிநாடு வாழ் தமிழர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும்.
உள்நாட்டு விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்; சென்னையில் தமிழ் பல்கலை அமைக்க வேண்டும் என, உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜராகி, ''சமஸ்கிருத மொழிக்கு 1,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ் மொழிக்கு குறைந்த அளவு நிதியை ஒதுக்குகிறது. இலங்கை, பிரான்ஸ் நாட்டு விமானங்களில் கூட, தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவதில்லை,'' என்றார்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், 'தஞ்சாவூரில் தமிழ் பல்கலை உள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ் கல்வெட்டுகளை ஆவணப் படுத்த கோரிய வழக்கில், மாநில தொல்லியல் துறையை ஏன் சேர்க்கவில்லை என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில தொல்லியல் துறையை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தனர்.
மேலும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு, 26 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறி, மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பக்கப்பட்டது; வெளிநாடு வாழ் தமிழர் குறைதீர் ஆணையம் அமைக்கும் விவகாரம் முக்கியமானது எனக் கூறிய நீதிபதிகள், இவ்விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.
தொடர்ந்து உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்குகளை தள்ளி வைத்தனர்.