விளம்பர விழாவால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்
விளம்பர விழாவால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்
விளம்பர விழாவால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்
ADDED : ஜூன் 14, 2024 05:32 AM

கோவை : பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை: கோவையில் வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., முப்பெரும் விழா நடக்கிறது.
முதலில் ஜூன் 14ல் நடத்த முடிவு செய்தனர்; பண மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தேதி என்பதால், நாற்பெரும் விழாவாக கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கின்றனர்; வாழ்த்துகள்.
மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியும், நுாதன முறையில் கட்டண உயர்வை கொண்டு வந்தும், கோவை பகுதி குறு, சிறு தொழிற்சாலைகளை தி.மு.க.,வினர் முடக்கினர்.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததுடன், ஒரு துறை விடாது அத்தனை தொழில் துறைகளிலும் கமிஷன், கலெக் ஷன் என அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தனர்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாமல், கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல், மூன்று ஆண்டுகளை கழித்துவிட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.
சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. தி.மு.க.,வுக்கு அவை குறித்து எந்தக் கவலையும் இல்லை. கோவைக்கு உடனடி தேவை, சாலை வசதியும், தண்ணீர் பஞ்சத்துக்கான தீர்வும் தான். மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.
உண்மையிலேயே தி.மு.க.,வுக்கு கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், 60 ஆண்டு கனவு திட்டமான 'அவினாசி - அத்திக்கடவு' திட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். நீர் நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்திருக்க வேண்டும்.
தென்னை விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.