சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அ.தி.மு.க., கோவையில் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தாக்கு
சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அ.தி.மு.க., கோவையில் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தாக்கு
சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அ.தி.மு.க., கோவையில் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தாக்கு
ADDED : ஜூன் 06, 2024 07:43 PM
கோவை:''கூட்டணியில் இருந்தபோது ஒரு பேச்சு, கூட்டணிக்கு வெளியே போன பின் ஒரு பேச்சு என்ற சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம். சந்தர்ப்பவாத அரசியலால் அ.தி.மு.க.,வை பொதுமக்கள் நிராகரித்து விட்டனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்தபோது வரலாறு காணாத தோல்வியை நாங்கள் கண்டோம், குறைந்தபட்சம் 3.5 லட்சம் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் இருந்தது. 2024 தேர்தலில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என அ.தி.மு.க.,வுக்கு தெரிந்துள்ளது. அதனால் 'நாங்க ரெண்டுபேரும் ஒன்றாக இருந்திருந்தால் 35 தொகுதிகளில் ஜெயித்திருப்போம்' என்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மூன்று அணிகளையும் எடைபோட்டுப் பார்த்து விட்டு பொதுமக்கள் ஓட்டு போட்டனர்.
தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.,தலைவர்கள் என்ன சொன்னார்கள்? 'பா.ஜ.,வுடன் இப்போது நாங்கள் இல்லை, வராத ஓட்டுக்கள் வரும். இத்தனை காலமாக நிர்ப்பந்திக்கப்பட்டு பா.ஜ., கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தோம்' என்றனர். வேலுமணி சொல்வதை பார்த்தால், எடப்பாடி பழனிசாமியுடனான உட்கட்சி பிரச்னையில் இப்படியெலாம் பேசுவது போல தோன்றுகிறது. கடுமையான தோல்வி தந்த விரக்தியில் அ.மு.க.,வில் வேலுமணி போன்றவர்கள் பேசுகின்றனர்.
கடந்த 2019ல் அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தபோது, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தற்போது பல இடங்களில் டிபாசிட்டை இழந்திருக்கின்றனர். இதை உணராமல், எதையோ பேசுகின்றனர் அ.தி.மு.க., தலைவர்கள். 2024ன் பாடம், அ.தி.மு.க, தலைவர்களை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர் என்பது தான். அ.தி.மு.க., செய்வது முழு சந்தர்ப்பவாத அரசியல். கூட்டணியில் இருந்தபோது ஒரு பேச்சு, கூட்டணியில் வெளியே போன பின் வேறு பேச்சு. இது தான் அ.தி.மு.க.,வின் இன்றைய நிலைப்பாடு.
கோவையில் ஆறு தொகுதிகளில் அவர்களது எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். தற்போது, கோவை மக்கள் அ.தி.மு.க.,வை முழுதுமாக நிராகரித்து விட்டனர். சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அ.தி.மு.க., நமக்கு வேண்டாம் என ஒதுக்கி விட்டனர்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து கொண்டிருக்கும் கட்சி. ஒரு பூனை யானையாக மாற வேண்டுமானால், ஒரு கடினமான பாதையில் நடக்க வேண்டும். அதுவரை கடுமையான பணி செய்ய வேண்டும். என்னை தேர்தலில் வீழ்த்தி விட்டதால், கோவையில் ஆட்டை ரோட்டிற்கு கொண்டுவந்து வெட்டி வெற்றியை கொண்டாடும் கொடூரமான வேலையை தி.மு.க., தரப்பு செய்திருக்கிறது. இப்படியெல்லாம் செய்யாதீர்கள்.
நான் கோயம்புத்துாரில் தான் இருக்க போகிறேன். இது தான் எனது ஊர். பா.ஜ.,வின் தொண்டனாக இருக்கிறேன். தி.மு.க., தொண்டனுக்கு அப்படி ஒரு கோபம் இருந்தால், அந்த கையை என் மீது வையுங்கள்; வாயில்லா ஜீவன் மீது காட்டாதீர்கள்.
இத்தனை ஆண்டுகளாக கோவை மக்கள், அ.தி.மு.க.,வின் ஊழலை பார்த்தார்கள். ஸ்மார்ட் சிட்டியில் எல்லாவற்றிலும் ஊழலை பார்த்தனர். கோவைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே நல்லதை செய்து காட்டுவோம். அதில் ஊழல் எதுவும் இருக்காது.
வரும் 2026ல் எங்கு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம். தற்போது மூன்று முனை போட்டியாக இருந்தது அடுத்த தேர்தலுக்கு இரு முனைப் போட்டியாக மாறும். இப்போது பெற்றதை விட கூடுதலாக ஓட்டு பெறுவோம்.
ஆளும் கட்சியின் பணபலம், படை பலம் தாண்டி, தடைகளை மீறித்தான் இவ்வளவு அதிகமாக ஓட்டு பெற்றுள்ளோம்.
சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை கோவை மக்கள் எங்களுக்கு உணர்த்தி உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.