Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஓ.பி.எஸ்., பாணியில் ஜெ., சமாதியில் தர்மயுத்தம்: அ.தி.மு.க., மாஜி அறிவிப்பு

ஓ.பி.எஸ்., பாணியில் ஜெ., சமாதியில் தர்மயுத்தம்: அ.தி.மு.க., மாஜி அறிவிப்பு

ஓ.பி.எஸ்., பாணியில் ஜெ., சமாதியில் தர்மயுத்தம்: அ.தி.மு.க., மாஜி அறிவிப்பு

ஓ.பி.எஸ்., பாணியில் ஜெ., சமாதியில் தர்மயுத்தம்: அ.தி.மு.க., மாஜி அறிவிப்பு

ADDED : ஜூன் 06, 2024 07:46 PM


Google News
திருச்சி:

''அ.தி.மு.க., ஒன்றுபட மே., 10ல் ஜெ., எம்.ஜி.ஆர்., சமாதியில் முறையிட்டு, பிரார்த்தனை நடத்த உள்ளேன்,'' என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த, 1975ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. அப்போது, பிரச்னையை தீர்ப்பதற்காக ஒரு குழை அமைத்தார். அக்குழு வாயிலாக சிக்கலுக்கு எம்.ஜி.ஆர்., தீர்வு கண்டார். இப்போதும், அ.தி.மு.க.,வுக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், எம்.ஜி.ஆர்., அமைத்தது போன்ற சிக்கல் தீர்க்கும் குழுவை அமைத்து, அதன் வாயிலாக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சிக்காக நிறைய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர். அந்த அடிப்படையில் கட்சி செயல்பட வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சி வளர்த்தவர்களுக்குத்தான் தேர்தல் தோல்வியின் வலி தெரியும். அந்த வகையில், எனக்கு அ.தி.மு.க.,வின் தோல்வியை தாங்க முடியவில்லை.

தனிக்கட்சி துவங்கிய தினகரன், அ.தி.மு.க., இணைப்பு குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. சசிகலா, கடந்த 2 ஆண்டாக அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பித்தது அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு. ஆனால், அதை வைத்து அவர் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்று, ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்டார். அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று கூறினேன், அவர் கேட்கவில்லை. இல்லாவிட்டால், 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று கூறினேன், அதையும் கேட்கவில்லை. நான் அ.தி.முக.,வுக்கு எப்போது சென்றாலும், பழனிசாமி என்னை சேர்த்துக் கொள்வார்.

அ.தி.மு.க., மீண்டும் ஒன்றுபட்டு, பெரும் சக்தியாக உருவெடுக்க, வரும், 10ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சமாதியில் பிரார்த்தனை செய்து முறையிட உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us