Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விவாகரத்து பெறாதவருடன் சேர்ந்து வாழ்ந்த மகளின் சொத்தில் தந்தைக்கு உரிமை உண்டு

விவாகரத்து பெறாதவருடன் சேர்ந்து வாழ்ந்த மகளின் சொத்தில் தந்தைக்கு உரிமை உண்டு

விவாகரத்து பெறாதவருடன் சேர்ந்து வாழ்ந்த மகளின் சொத்தில் தந்தைக்கு உரிமை உண்டு

விவாகரத்து பெறாதவருடன் சேர்ந்து வாழ்ந்த மகளின் சொத்தில் தந்தைக்கு உரிமை உண்டு

UPDATED : ஜூன் 18, 2024 09:03 AMADDED : ஜூன் 18, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'விவாகரத்து பெறாத ஆண் உடன், சேர்ந்த வாழ்ந்த மகளின் பெயரில் இருந்த சொத்தை, தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏற்கனவே திருமணமானவர்; ஐந்து குழந்தைகள் உள்ளன. அரக்கோணம் தாலுகாவில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வந்தார்.

அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய மார்கரெட் அருள்மொழி என்பவரை காதலித்தார். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர்.

செட்டில்மென்ட்


கடந்த 2010ல், அருள்மொழி பெயரில், வீடு ஒன்றை ஜெயச்சந்திரன் எழுதி வைத்தார். 2013ல் அருள்மொழி இறந்து விடவே, செட்டில்மென்ட் பத்திரத்தை தன்னிச்சையாக ஜெயச்சந்திரன் ரத்து செய்தார்.

இதையடுத்து, அருள்மொழியின் தந்தை யேசுரத்தினம், இறந்த மகளின் ஒரே சட்டப்பூர்வ வாரிசு தானே என்பதால், சொத்தை தன்னிடம் ஒப்படைக்க கோரி, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'கணவன் - மனைவியாக நாங்கள் வாழ்ந்தோம்; குடும்ப பென்ஷன் உள்ளிட்ட சலுகைகள் பெற, என்னை பிரதிநிதியாக அருள்மொழி நியமித்தார். அதன்படி, என்னிடம் பென்ஷன் வழங்கப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 'இருவருக்கும் சட்டப்படி திருமணம் நடந்தது என்பதை நிரூபிக்கவில்லை. ஜெயச்சந்திரனும், அருள்மொழியும் சேர்ந்து வாழ்ந்ததை, சட்டப்படியான திருமணமாக கருத முடியாது. எனவே, அருள்மொழியின் தந்தைக்கு, சொத்தில் உரிமை உள்ளது' என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஜெயச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதி டீக்காராமன் முன், விசாரணைக்கு வந்தது. மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போதே, யேசுரத்தினம் இறந்தார். இதையடுத்து, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:


தன் மகள், ஜெயச்சந்திரன் உடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் யேசுரத்தினம் கூறியுள்ளார். ஜெயச்சந்திரன் தரப்பில், முதல் மனைவியை சமுதாய வழக்கப்படி விவாகரத்து செய்து விட்டதாகவும், மார்கரெட் அருள்மொழியை திருமணம் செய்து, கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மனைவி மீதான அன்பு, பாசம் காரணமாக, வீட்டை எழுதி வைத்ததாகவும், அருள்மொழியின் பணி ஆவணங்களில் தன்னையே பிரதிநிதியாக குறிப்பிட்டு இருப்பதாகவும், ஜெயச்சந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விவாகரத்து சட்டத்தில், சமுதாய முறைப்படியான விவாகரத்து என்று எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை. மனைவி ஸ்டெல்லாவை விவாகரத்து செய்து விட்டதாக கூறுவதற்கு ஆதாரமாக, எந்த ஆவணங்களையும் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்யவில்லை.

உரிமையில்லை


அதனால், மறு திருமணத்துக்கு அவருக்கு தகுதியில்லை. எனவே, ஜெயச்சந்திரன் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. மார்கரெட் அருள்மொழியை, அவரது மனைவியாக கருத முடியாது.

பணி ஆவணங்களில், இறுதி பலன்களை பெறுவதற்காக பிரதிநிதியை குறிப்பிடுவது வழக்கம். ஒருவரை பிரதிநிதியாக நியமித்ததற்காக, அவர் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு என்று கூற முடியாது. ஜெயச்சந்திரனின் மனைவியாக அருள்மொழியை குறிப்பிட்டிருந்தாலும், சட்டப்படியான மனைவி என, அவர் உரிமை கோர முடியாது.

கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு இருந்தாலும், திருமண உறவு என்பது சட்டத்தின் அடிப்படையிலானது. ஆனால், சேர்ந்து வாழ்வது என்பது, இருவருக்கு இடையேயான உடன்பாடு தான்; சட்டப்படியான திருமணம் அல்ல.

சேர்ந்து வாழும் உறவில், ஒருவருக்கு அதை தொடர விருப்பம் இல்லை என்றால், அந்த உறவு முடிவுக்கு வந்து விடும். இப்போதெல்லாம், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுபவர்கள், சேர்ந்து வாழ்வதாக கூறிக்கொள்வது கண்டனத்துக்குரியது.

எனவே, ராணிப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

யேசுரத்தினம் இறந்து விட்டதால், இந்திய வாரிசுரிமை சட்டப்படி, வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற உரிமை உள்ளது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us