வேடந்தாங்கல், கூந்தன்குளம் மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி
வேடந்தாங்கல், கூந்தன்குளம் மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி
வேடந்தாங்கல், கூந்தன்குளம் மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி
ADDED : ஜூன் 07, 2024 02:02 AM
சென்னை, தமிழகத்தில், 15 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் வனத்துறை பராமரிப்பில் உள்ளன. இந்த இடங்களில் சூழலியல் சார்ந்த பாதிப்புகளை தடுப்பதற்காக, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் தமிழகம் வரும் வலசை பறவைகள், இங்குள்ள சரணாலயங்களில் தான் முகாமிடுகின்றன. இதன் காரணமாக, இந்த சரணாலயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு சரணாலயங்கள் சர்வதேச அளவில், 'ராம்சார்' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதனால், இவற்றின் மேம்பாட்டு பணிகளுக்கு வனத்துறை கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயங்களில் பார்வையாளர்கள் வருகை சமீப ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப, இங்கு அடிப்படை வசதிகள் மேம்படவில்லை.
இது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக 9.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதே போன்று, திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் மேம்பாட்டு பணிகளுக்காக, 6 கோடி ரூபாய் என மொத்தம், 15.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கையின் போது, இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், நிதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த சில மாதங்களில், இந்த நிதியை முழுமையாக பயன்படுத்தி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.