கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்
UPDATED : ஜூன் 20, 2024 01:10 PM
ADDED : ஜூன் 20, 2024 11:31 AM

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக, அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜூன் 20) அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் கொடுத்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.