ADDED : ஜூன் 20, 2024 12:13 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 4 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சி, அதனை கண்ணுகுட்டி என்பவர் வாங்கி வந்து, கருணாபுரத்தில் இதற்காக தனி வீடு ஒன்றில் வைத்து பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்துள்ளார். ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த கள்ளச்சாராயம், மலிவு விலையில், அதிக போதை தருவதால், அக்கிராமத்தினர் சிலர் தொடர்ந்து வாங்கி அருந்தியுள்ளனர்.
பாக்கெட் போடுவதுடன் வீட்டில் 24 மணி நேரமும் சாராயம் விற்றுள்ளார் கண்ணுகுட்டி. அதுமட்டுமல்லாமல் கண்ணுகுட்டி வீட்டில் இருந்து ஏஜென்டுகளுக்கும் பாக்கெட் சாராயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.