Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

UPDATED : ஜூன் 20, 2024 03:21 PMADDED : ஜூன் 20, 2024 11:14 AM


Google News
Latest Tamil News
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி குறித்து காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக காங்., தலைவர் செல்வ பெருந்தகை


சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல அங்கு செல்கிறோம். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அதிகமானோர் கள்ளச்சாராயத்தால் பலியாகினர். ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றால், அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்


கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ., எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22ல் தமிழக பா.ஜ., சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாமக தலைவர் அன்புமணி


கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் சாராய வியாபாரிகளுக்கு திமுக கொடுத்த ஆதரவுதான்.

சீமான், நாம் தமிழர் கட்சி


கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை கண் துடைப்பு நாடகம்; 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுலையில் உள்ள நிலையில் கைதானவர் தொடர்ந்து சாராயம் விற்றது எப்படி? காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டுமென்றும், இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us