/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வருமான வரியை குறைத்து செலுத்தினால் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க நேரிடும் வருமான வரியை குறைத்து செலுத்தினால் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க நேரிடும்
வருமான வரியை குறைத்து செலுத்தினால் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க நேரிடும்
வருமான வரியை குறைத்து செலுத்தினால் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க நேரிடும்
வருமான வரியை குறைத்து செலுத்தினால் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க நேரிடும்
ADDED : செப் 11, 2025 05:38 AM

சிவகாசி : ''வருமான வரியை குறைத்து செலுத்தினால் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க நேரிடும்,'' என சிவகாசியில் நடந்த பட்டாசு உற்பத்தியாளர் களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் வருமான வரித்துறை துணை இயக்குநர் ஸ்வேதா தெரிவித்தார்.
தமிழ்நாடு புதுச்சேரி வருமான வரித்துறை, விசாரணை பிரிவு சார்பில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன் வரவேற்றார்.
இதில் வருமான வரித்துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் ஸ்வேதா பேசுகையில்: ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது. பட்டாசு தொழில் தமிழ்நாடு மற்றும் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பட்டாசு தொழில் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரிவருவாய் என்பது நேர்மாறாக மிகவும் குறைவாக உள்ளது.
வரி ஏய்ப்பு என்பது உற்பத்தியை குறைப்பது, செலவை அதிகப்படுத்துவது, பில் இல்லாமல் விற்பனை செய்வது. ரொக்க பரிவர்த்தனைகளை கணக்கில் காட்டாமல் வரியை குறைவாக செலுத்துவது ஆகும்.
வருமான வரி சோதனையில் வரியை குறைவாக செலுத்தியது கண்டறியப்பட்டால், வரியுடன் சேர்த்து 50 முதல் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். வரி ஏய்ப்பு தொடர்ந்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்ய வழி வகை உள்ளது.
பட்டாசு தொழிலுக்கு ஆயிரம் பிரச்னை உள்ளது. அதோடு வரி பிரச்னையையும் சேர்க்க வேண்டாம். முறையாக வரி செலுத்தி பிரச்னையை தவிர்க்கலாம். முன்னதாக வருமான வரி (அட்வான்ஸ் டேக்ஸ்) செலுத்துவதன் மூலம் நோட்டீஸ், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம். புதிய வருமான வரி விதிகள் குறித்து, கணக்குகளை கையாளும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.
டான்பாமா தலைவர் கணேசன் பேசுகையில்: ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் என்பது உற்பத்தி மதிப்பு அல்ல, இந்தியா முழுவதும் விற்பனையாகும் பட்டாசு விற்பனை மதிப்பு . விருதுநகர் மாவட்டத்தில் 1100 பட்டாசு ஆலைகளில் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் 65 சதவீதம் பேர் பெண்கள் தான். நாடு முழுவதும் பட்டாசு தொழில் மூலம் 1.5 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக 8 ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு உற்பத்தி மதிப்பில் 55 சதவீதம் கூலிக்கு செல்கிறது. பட்டாசு உற்பத்தியில் கூலி, முலப்பொருட்களுக்கு அதிக தொகை செல்கிறது. மேலும் போட்டி காரணமாக அதிக தள்ளுபடி வழங்குவதால் பட்டாசு தொழிலில் லாபம் என்பது குறைவு தான், என்றார்.
தொடர்ந்து பட்டாசு மற்றும் அச்சுத்தொழில் உரிமையாளர்களின் சந்தேகங்களுக்கு துணை இயக்குநர் பதில் அளித்தார்.
வருமான வரித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர்கள் ரவீந்திரன், ரமேஷ், டான்பாமா துணை தலைவர் அபிரூபன், செயலாளர் சங்கர், பட்டாசு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.