Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடருது!

அருப்புக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடருது!

அருப்புக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடருது!

அருப்புக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடருது!

ADDED : மே 21, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்க 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 6 போலீஸ் அவுட்போஸ்ட்கள் உள்ளன.

2023ல், சிசிடிவி., கேமராக்கள் கண்ட்ரோல் ரூம் பயன்பாட்டிற்கு வந்தது. இவற்றின் மூலம் நகரின் பல பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள், பஸ் ஸ்டாப்புகள், மார்க்கெட் பகுதிகள்ஆகியவற்றில் குற்றச்செயல்களை கண்காணிக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை கண்டுபிடிக்கவும், வாகனங்களை அதிவேகமாக ஓட்டி செல்பவர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இதே போன்று, அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோடு, திருச்சுழி ரோடு பந்தல்குடி ரோடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் அவுட் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் இருந்தும் நகரில் குற்ற செயல்கள் தொடர்ந்து நடக்கிறது. பஸ் ஸ்டாப்புகளில் நிற்கும் பெண்களிடம் பர்ஸ்கள் பறிப்பு, நகை, அலைபேசிகள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. குறிப்பாக அகம்படியரும் மஹால் பகுதியில் பஸ்கள் ஏற வரும் பெண்களிடம் பெண்களே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள்,போலீசார் இருந்தும் பயனில்லை.

மதுரை ரோட்டில் உள்ள அன்பு நகர் பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடக்கிறது.

பூட்டிய பெட்டி கடைகளில் திருட்டு, கோழிகள் வளர்ப்பவர்கள் வீட்டில் மொத்தமாக கோழிகளை திருடிச் செல்வது, ஆடுகள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

டூவீலர்கள் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது. பூட்டிய வீடுகளிலும் நகை பணம் திருட்டுகள் நடக்கிறது.

பஸ்களில் பயணம் செய்யும் பெண்களிடம் தான் திருட்டுச் சம்பவங்கள் தினமும் நடக்கிறது. பஸ் ஏறும் பெண்களிடம் அவர்களை உரசி பஸ் ஏறுவது போல் அவர்கள் வைத்துள்ள பையில் இருந்து பர்சை திருடி செல்கின்றனர்.

பஸ்ஸில் டிக்கெட் எடுக்க பார்க்கும்போதுதான் பர்ஸ் திருடு போனது தெரிய வருகிறது. டவுன் தாலுகா ஸ்டேஷனில் திருட்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு மட்டும் வருகிறது.

இவற்றை கண்டுபிடிக்க போதுமான போலீசார் இல்லை. பல சிசிடிவி கேமராக்களும் இயங்குவது இல்லை. போலீஸ் அவுட் போஸ்ட் இருந்தும் செயல்படாமல் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து கண்ட்ரோல் ரூமில் கண்காணிக்க தனியான போலீசார், நகரில் பகல், இரவு ரோந்து பணிகளில் போதுமான போலீசாரை பணியில் அமர்த்த எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us