ADDED : மே 21, 2025 06:22 AM
அருப்புக்கோட்டை; ரோடு, தேங்கும் கழிவுநீர், தெருவிளக்கு உட்பட பல்வேறு வசதி குறைபாட்டால் அருப்புக்கோட்டைஆனந்தபுரி நகர் குடியிருப்போர் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தபுரி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தலைவர் சரவணன், செயலாளர் சிவகுருநாதன், பொருளாளர் சுப்புலட்சுமி, உதவி செயலாளர் தனலட்சுமி, உதவி தலைவர் சந்தனமேரி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, குணசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கூறியதாவது:
ஆனந்தபுரி நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஊராட்சி மூலம் இந்திராகாந்தி குடிநீர், ஜல்ஜீவன் திட்ட குடிநீர், ஊராட்சி குடிநீர் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
இத்தனை குடிநீர் திட்டங்கள் இருந்தும் குடிநீர் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. 10, 15 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் மட்டுமே வருகிறது. வீடுகளில் குடிநீர் பிடிப்பதற்குள் நின்று விடுகிறது.
தெருக்களில் 20 ஆண்டுகளாக ரோடு இல்லை. நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்து பயன் இல்லை. மெயின் ரோட்டில் இருந்து தெருவுக்குள் கற்கள் பெயர்ந்து ரோட்டில் நடந்து வருவதற்குள் படாதபாடுபட வேண்டி உள்ளது.
டூ வீலர்கள் கற்கள் குத்தி பஞ்சர் ஆகிவிடுகிறது. வயதானவர்களால் நடந்து செல்ல முடியாமல் தடுக்கி விழுகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை சகதியில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
தெருக்களில் போதுமான மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சிரமப்பட வேண்டியது. தெருவில் வாறு கால்கள் இருந்தும் கழிவு நீர் வெளியேற முடியாமல் உள்ளது.
தூய்மை பணியாளர்கள் வாறுகால்களை சுத்தம் செய்ய வருவது இல்லை. வாறுகால்களில் முட்புதர்கள் முளைத்து கழிவு நீர் தேங்கி கிடக்கிறது.
எங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. மெயின் ரோட்டில் இருந்து ஆனந்தபுரி நகர் வரும் நுழைவுப் பகுதி கிடங்காக உள்ளது. இந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும். கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
வாறுகால்களை புதியதாக கழிவு நீர் வெளியேறும் வகையில் அமைத்து தர ஊராட்சியில் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் பகுதிக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.