Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசி, ஸ்ரீவி., ராஜபாளையத்தில் விடிய விடிய கொட்டியது மழை: குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

சிவகாசி, ஸ்ரீவி., ராஜபாளையத்தில் விடிய விடிய கொட்டியது மழை: குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

சிவகாசி, ஸ்ரீவி., ராஜபாளையத்தில் விடிய விடிய கொட்டியது மழை: குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

சிவகாசி, ஸ்ரீவி., ராஜபாளையத்தில் விடிய விடிய கொட்டியது மழை: குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

ADDED : ஜன 06, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் சிவகாசி, ஸ்ரீவி., ராஜபாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பில் வெள்ளம் புகுந்தது. ஸ்ரீவில்லிபுத்துாரில் 70.30 மி.மீ., விருதுநகரில் 10 மி.மீ., சாத்துாரில் 4 மி.மீ., சிவகாசியில் 54 மி.மீ., பிளவக்கல்லில் 42.20 மி.மீ., வத்திராயிருப்பில் 69 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 82 மி.மீ., பதிவானது.

விருதுநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை வரை பரவலான மிதமான மழை பெய்தது.

சிவகாசி ஊராம்பட்டி ஊராட்சி மாரனேரி ரோட்டில் சுப்ரமணியபுரம் காலனி செல்லும் வழியில் ஊருணி உள்ளது. ஊருணியை ஒட்டியே குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பெய்த மழையில் ஊருணி நிறைந்து தண்ணீர் வெளியேற வழி இன்றி குடியிருப்புகளுக்குள் புகுந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் குடியிருப்புகளை தண்ணீர் முழுமையாக சூழ்ந்தது. மேலும் 50க்கு மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

மேலும் இங்குள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தையும் தண்ணீர் சூழ்ந்தது. தவிர பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் புகுந்ததால் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றக் கோரி சுப்பிரமணியபுரம் காலனி மக்கள் மாரனேரி ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.

ராஜேஸ்வரன், சுப்பிரமணியபுரம் காலனி, ஊருணி நிறைந்தால் தண்ணீர் வெளியேறும் ஓடை ஆக்கிரமிப்பினால் அடைபட்டு விட்டது. இதனால் தண்ணீர் வெளியேற வழி என்று குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டது. மேலும் ஊருணி முழுவதுமே பாசி படர்ந்துள்ளதோடு குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது. எனவே தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம்


சுற்று பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகள், கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. சத்திரப்பட்டி அருகே வேலாயுதபுரம் வாகைகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேறியதால் வாகைகுளம்பட்டி பகுதியில் உள்ள 35க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

இப்பகுதி மெயின் ரோட்டில் நடந்து வரும் பாலத்திற்காக போடப்பட்டிருந்த தற்காலிக பாதை வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்தும் பாதித்தது.

இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். அப்பகுதி பொதுமக்கள் மழை நீர் வெளியேற வடிகால் வசதி ஏற்படுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

வடக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்ததையடுத்து கலைந்து சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்


செண்பக தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையினால் மம்சாபுரம் கண்மாய்கள் நிரம்பி வழிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு அதிகளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டு திறந்து விடப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:00 மணி வரை செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்ததில் பேயனாற்றில் கடும் நீர்வரத்து ஏற்பட்டு மம்சாபுரத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பின.

இதனால் மம்சாபுரத்தின் மேற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்களில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

வயல்களில் தேங்கிய தண்ணீரை வரப்புகளை உடைத்து விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றினர். போதிய மழை பெய்து மம்சாபுரம் பகுதி கண்மாய்கள் நிரம்பி நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று பெய்த மழை விவசாயிகளை கண்ணீருக்கு ஆளாக்கியது.

மம்சாபுரம் கண்மாய்களில் இருந்து மறுகால் விழுந்த தண்ணீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயிருக்கு காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் வந்தது. இதனால் பெரியகுளம் கண்மாயிலிருந்து நேற்று அதிகாலை முதலே தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டது.

நகர் பகுதியில் பெரும்பள்சேரி தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது.

நகராட்சியில் பஜார் வீதிகள் மற்றும் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடை கழிவுகளை அள்ளி ரோட்டில் போட்டிருந்த நிலையில், மழையினால் ரோட்டில் சகதி ஏற்பட்டு மக்கள் அவதிக்கு ஆளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us