ADDED : ஜூன் 01, 2025 01:02 AM

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார், வெம்பக்கோட்டை அருகே விளாமடத்துப்பட்டியில் மாரீஸ்வரன் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
விளாமடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாரி 52. இவருக்கு சொந்தமான டி.ஆர்.ஓ., லைசன்ஸ் பெற்ற மாரீஸ்வரன் பட்டாசு ஆலை அதே பகுதியில் செயல்படுகிறது. ஆலையில் 12 அறைகள் உள்ளன. இங்கு சோல்சா, லட்சுமி வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இந்த பட்டாசு ஆலை 4 நாட்களுக்கு முன் தான் திறக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.
நேற்று காலை 7:00 மணிக்கு ஆலை போர்மேன் கணேசன் 56, அறை எண் 1 கெமிக்கல் மவுண்ட் அறையை திறந்த போது அங்கு ஏற்கனவே மருந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு வளையத்திலிருந்து புகை கிளம்பியது. உடனடியாக சுதாரித்த அவர் தொழிலாளர்களை எச்சரித்து ஆலையை விட்டு வெளியேற்றி தப்பினார். சிறிது நேரத்தில் அறையில் இருந்த பட்டாசு முழுவதுக்கும் தீ பரவியது.
வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடத்துக்கும் சேதம் ஏற்படவில்லை. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.