Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு 4 ஆண்டுகளில் 42 உடல்கள் தானம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு 4 ஆண்டுகளில் 42 உடல்கள் தானம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு 4 ஆண்டுகளில் 42 உடல்கள் தானம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு 4 ஆண்டுகளில் 42 உடல்கள் தானம்

ADDED : மார் 23, 2025 04:33 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு 2022 முதல் 2025 மார்ச் வரை 42 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளது.

மேலும் கடந்தாண்டு முதல் முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புதிதாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை உட்பட 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளை 2022 ஜன. 12ல் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து மாவட்டத்தின் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் இருந்து ஸ்கேன், எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனைகள், சிகிச்சைக்கு அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும் மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்ட போது இருந்த 650 படுக்கைகள் தற்போது தேவை அதிகரிப்பால் 1200 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தாற் போல பணியாளர்களும் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 2022ல் 4 உடல்கள், 2023ல் 18, 2024ல் 12, 2025 மார்ச் வரை 8 என மொத்தம் 42 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு அக்டோபரில் சாத்துாரைச் சேர்ந்த ராமர் 47, விருதுநகர் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார்.

இவரின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு கண்கள், சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் ஆறு நோயாளிகள் பலன் அடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இனி வரும் காலங்களில் உடல் உறுப்பு தானம் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us