ADDED : ஜூன் 18, 2024 06:43 AM

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி உள்ளிட்ட என அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வணிக வளாகங்களும் பயன்பாட்டிற்கு வரவில்லை என மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் தினமும் 300க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. சாத்துார், விருதுநகர், ஸ்ரீவி., ராஜபாளையம் உள்ளிட்ட நகரிலிருந்து பல்வேறு பணி நிமித்தமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.
உள்ளூர்,வெளியூர் பயணிகள் இவ்வளவு பேர் வந்தும் பஸ் ஸ்டாண்டில் குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.
ரூ. 2 கோடி செலவில் பணிகள் நடந்து முடிந்தும்முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட வணிக வளாகங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
இதே நிலை நீடித்தால் விரைவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் இடம் சேதம் அடைந்துஉள்ளது. மழைக் காலங்களில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது.
மேலும் டிரைவர்கள், நடத்துநர்கள் அறை, புக்கிங் அறை, மாற்றுத் திறனாளிகள் அறை கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
லெவின் ராம், சமூக ஆர்வலர்: பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தப்படும் பெரும்பான்மையான இடங்கள் பள்ளமாக இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி விடுகிறது. இதில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
இங்கு வருகின்ற பயணிகளுக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஓய்வு அறை கட்டப்பட்டும் பயன்பாட்டில் இல்லாததால் அவர்கள் ஓய்வு எடுக்க சிரமப்படுகின்றனர்.
தங்க கிளிண்டன், தனியார்ஊழியர்: மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் உள்ளேயே தேங்கி விடுகிறது. கொசு உற்பத்தியாகி பயணிகளை சிரமப்படுத்துகிறது. மேலும் வாகனங்களால் தண்ணீர் அடிக்கப்பட்டு பயணிகள் மீது தெறிக்கிறது. பஸ் ஸ்டாண்ட் முன்பு உள்ள வாறுகாலை துார்வார வேண்டும்.
ஆறுமுகம், ஆட்டோ டிரைவர்: பஸ் ஸ்டாண்ட் நுழையும் இடம் அருகே உள்ள சிக்னல் செயல்படவில்லை. இதனால் போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது விபத்திற்கும் வழி வகுக்கிறது. பஸ் வெளியேறுவதற்கு டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் செல்வது சிரமம் ஏற்படுகின்றது.
கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர்: பஸ் ஸ்டாண்ட் முழுமையாக சீரமைக்கப்படும். மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாகங்களுக்கு மறு டெண்டர் விடப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.