ADDED : ஜூன் 07, 2024 04:39 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியினர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் சட்டத்திற்கு எதிராக குழந்தையை தத்தெடுத்து வளர்த்தல், விற்பனை செய்வது குறித்து புகார் எழுந்தால் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் விசாரிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை, ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
தத்தெடுத்தல் திட்டத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகள், கைவிடப்பட்ட, வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், உறவு முறையில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம். இதற்காக மத்திய தத்துவள ஆதார மையத்தின் www.cara.nic.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதில் பெற்றோர் என்ற பகுதியை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கணவன், மனைவி இருவரும் பிறப்பு, திருமணம் பதிவு, மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச் சான்று, ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை / ரேஷன் கார்டு, பான்கார்டு, தம்பதியரின் புகைப்படம், குடும்ப ஆண்டு வருமானம், அரசு / தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்றிதழ், நண்பர் / உறவினரால் வழங்கப்படும் ஆளறிச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வ.உ.சி., நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626 003, தொலைபேசி எண் 04562 293946, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு தத்தெடுப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.