ADDED : ஜூன் 14, 2024 04:24 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே நாராயணபுரம் செல்லும் வழியில் ரோட்டில் மண்மேவி மோசமான நிலையில் உள்ளதால் விபத்து அச்சம் உள்ளது.
விருதுநகர் -- அழகாபுரி ரோட்டில் செங்குன்றாபுரம் செல்லும் வழியில் நாராயணபுரம் கிராமம் அருகே உள்ள ரோட்டின் ஒரு பகுதியில் மண்மேவி உள்ளது. இப்பகுதியில் அதிகப்படியான கனரக வாகனங்கள் குவாரியின் உடைகல், கிராவல் ஏற்றி செல்கின்றன. அதே போல் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு செல்வதற்கு முக்கிய வழி என்பதால் தினசரி அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் நாராயணபுரம் அருகே ரோட்டின் மண்மேவி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக கனரக வாகனங்களுக்கு வழி விட டூவீலர்கள் ஒதுங்கும் போது இது போன்ற மண்குவியலில் சிக்கி வழுக்கி விழுகின்றனர். எனவே இதை கவனித்து மாநில நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.