Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையத்தில் யானைகளால் தொடர் சேதம் பரிதவிப்பில் விவசாயிகள்

ராஜபாளையத்தில் யானைகளால் தொடர் சேதம் பரிதவிப்பில் விவசாயிகள்

ராஜபாளையத்தில் யானைகளால் தொடர் சேதம் பரிதவிப்பில் விவசாயிகள்

ராஜபாளையத்தில் யானைகளால் தொடர் சேதம் பரிதவிப்பில் விவசாயிகள்

ADDED : ஜூலை 14, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வெகு தொலைவில் அமைந்துள்ள விவசாய தோப்புகளில் 23 நாட்களாக தொடர்ந்து அழித்து வரும் யானை கூட்டத்தால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் வேறு வழியின்றி எஞ்சியுள்ள பலா, மா மரங்களில் உள்ள காய்களை பறித்து ஆற்றில் வீசி வருகின்றனர்.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் வழியில் பண்டாரப் பாறை, கன்னிமார் கோயில் பகுதிக்கு இடையே 250 ஏக்கருக்கும் அதிகமான மா, பலா, தென்னை வாழை உள்ளிட்ட தோப்புகள் விவசாயம் நடந்து வருகிறது.

இப்பகுதியை ஒட்டி செல்லும் அய்யனார் கோயில் ஆற்றின் நீர்வரத்து காரணமாக விவசாய பொருட்கள் விளைச்சல் நன்கு காணப்படும். இப்பகுதிகளில் குத்தகைதாரர்கள், காவல், விவசாய பணி என தினமும் நுாற்றுக்கணக்கானோருக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்கி வரும் நிலையில் இப்பகுதியில் ஜூன் 20ல் முதன் முறையாக 6 முதல் 8 யானைகள் புகுந்து சேதம் ஏற்படுத்தியது. தென்னங்கன்றுகளின் குருத்துகளை பிய்த்தும், மாங்காய்களை பறித்தும், கிளைகளை உடைத்தும் சேதம் ஏற்படுத்த துவங்கின.

இப்பிரச்சனை தொடர்ந்ததால் வனத்துறைக்கு தகவல் அளித்து காட்டுப் பகுதியில் மிரட்டி விட ஒத்துழைப்பு வேண்டினர். இருப்பினும் பிரச்னை தீராததால் அடுத்தடுத்த விவசாய பகுதியில் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து காவலர்களை அமர்த்தி இரவு நேரங்களில் ஆங்காங்கு சருகுகளை குவித்து தீ மூட்டியும், அதிக ஒளி உடைய மின் விளக்குகள் காட்டியும் காவல் காத்து யானை வருவது தெரிந்தவுடன் சத்தமிட்டு விரட்டியும் வந்தனர்.

20 நாட்களாக இதே நிலை நீடித்தும் யானை கூட்டம் ஆற்று பகுதி வழியாக நுழைந்து சேதம் ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குட்டியுடன் புகுந்த யானை கூட்டம் நன்கு வளர்ந்த பலா மரக்கிளைகளை உடைத்தும், வேரோடு சாய்த்தும், காய்த்து வரும் தென்னை மரங்களை பிடுங்கி எரிந்தும் சென்றுள்ளன. இப்பகுதியில் இருந்த இரண்டு மாடுகளும் யானை தாக்குதலுக்கு பலியாகி உள்ளன.

தொடர்ந்து இரவு நேர காவல் காத்தும் யானைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வனத்துறையினரும் முறையான ஒத்துழைப்பு வழங்காததால் மா, பலா மரங்களில் உள்ள காய்களை பறித்து ஆற்றில் போட்டு வருகின்றனர். இதனால் மரங்களையாவது காக்க முடியும் என்ற நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து விவசாயி கண்ணன் ராஜா:

வனப்பகுதியை விட்டு வெகு தொலைவில் உள்ள விளை நிலங்களுக்குள் யானை புகுந்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு விவரம் தெரிந்து 50 ஆண்டுகளாக இப்பகுதிகளில் யானை வந்தது இல்லை. தொடர்ந்து சேதப்படுத்தி வரும் பகுதிகளிலோ பாதிப்பு குறித்தோ வனத்துறையினர் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. வேறு வழியின்றி மரங்களை பாதுகாக்க மீதமுள்ள காய்களை அகற்றி வெளியேற்றுகிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us