Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரிசி கோடவுனில் வண்டு: குப்பை கிடங்கில் நச்சுப்புகை இடையில் சிக்கித் தவிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்

அரிசி கோடவுனில் வண்டு: குப்பை கிடங்கில் நச்சுப்புகை இடையில் சிக்கித் தவிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்

அரிசி கோடவுனில் வண்டு: குப்பை கிடங்கில் நச்சுப்புகை இடையில் சிக்கித் தவிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்

அரிசி கோடவுனில் வண்டு: குப்பை கிடங்கில் நச்சுப்புகை இடையில் சிக்கித் தவிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்

ADDED : ஜூன் 21, 2024 03:42 AM


Google News
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை - நரிக்குறவர் காலனி 15 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் அரசு ஒதுக்கிய இடத்தில் இருந்தது . பின்னர், சுக்கிலநத்தம் ரோடு அருகில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கட்டடம், நகராட்சி குப்பை கிடங்கு இரண்டுக்கும் இடையில் உள்ள இடத்தில் நரிக்குறவர் காலனிக்கு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேறினர். இங்கு வந்து 15 ஆண்டுகள் ஆகியும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.

மெயின் ரோட்டிலிருந்து காலனிக்கு வர முறையான ரோடு இல்லை. மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து காலனி தனி தீவு ஆகி விடுகிறது. அரிசி குடோனில் இருந்து மாலை நேரத்தில் சிறிய வண்டுகள் காலனி முழுவதும் பறக்கிறது.

இதன் தொல்லை ஒருபுறம் என்றால் அருகில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து கிளம்பும் நச்சுப் புகையை காலனி மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறுகின்றனர்.

காலனிக்குள் ரோடு, வாறுகால், மின்விளக்கு வசதிகள் இல்லை. காலனியில் அரசு இடம் மட்டும் தான் ஒதுக்கி உள்ளது. அதில் வீடு கட்டித்தர பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மக்கள் தாங்களாகவே தார்ப்பாய், பிளாஸ்டிக் பாய்களை வைத்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

பலத்த காற்று அடித்தால் இவைகள் பறந்து போய் விடுகிறது. காலனியில் இருந்து பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி இல்லை. மாணவர்கள் நடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது.

வீடுகள் வேண்டும்


சிவாஜி, தொழிலாளி: இந்த ஊருக்கு குடியேறி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு இடங்கள் மாறி வந்து விட்டோம். எங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை. காலனியில் அரசு ஒதுக்கி தந்த இடத்தில் வீடு கட்டி தர வேண்டும். வீடுகள் இன்றி நாங்கள் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்படுகிறோம். மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாச கோளாறு


கமல், தொழிலாளி: நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து அடிக்கடி தீ வைப்பதால் ஏற்படும் நச்சுப் புகை காற்றில் எங்கள் காலனியை சூழ்ந்து விடுகிறது. இதனால் எங்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இதேபோன்று அரிசி குடோனில் இருந்து வரும் வண்டுகள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

வசதிகள் இல்லை


பரிமளா, குடும்ப தலைவி: மழைக்காலமானால் காலனிக்குள் வர முடியாதபடி மழை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. முறையான பாதை இல்லாமல் சேறும், சகதியிலும் நடந்து வர வேண்டியுள்ளது.

பள்ளி குழந்தைகள் சிரமப்பட்டு செல்கின்றனர். தெரு விளக்கு வசதி இல்லை. பஸ்களும் எங்கள் பகுதியில் நிற்பதில்லை. எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுகிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us