/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.4.50 கோடி முறைகேடுகூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.4.50 கோடி முறைகேடு
கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.4.50 கோடி முறைகேடு
கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.4.50 கோடி முறைகேடு
கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.4.50 கோடி முறைகேடு
ADDED : பிப் 10, 2024 06:28 AM

விழுப்புரம், : கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 4.50 கோடி முறைகேடு செய்த முன்னாள் தலைவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், முந்தைய ஆட்சியில் பல கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக, தற்போதைய சங்க உறுப்பினர்கள், சில மாதங்களுக்கு முன், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சங்க செயலாளராக இருந்த சையத் சாதிக் பாஷா, நிர்வாகக்குழு தலைவர் சாந்தி, துணைத் தலைவர் அருள்மேரி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் சங்க ஊழியர்களான முதுநிலை எழுத்தர் பசுமலை, சிற்றெழுத்தர் முருகன், விற்பனையாளர் விஜயராஜ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வரை போலி ரசீது மூலம், பலரிடம் நிரந்தர வைப்புத் தொகையை பெற்றும், நகை கடன்தாரர்களுக்கு அதிக தொகை வழங்கியதாகவும், நகைகடன் தள்ளுபடி பெறுவதற்காக, பலரது பெயரில் போலியாக நகை கடன் வழங்கியதாக பொய் கணக்கு எழுதி 4 கோடியே 50 லட்சத்து 60 ஆயிரத்து 652 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திண்டிவனம் சரக துணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி அளித்த புகாரின் பேரில், வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 7ம் தேதி வழக்கு பதிந்து, 17 பேரையும் தேடிவந்தனர்.
அதில், வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் செயலாளர் சையத்சாதிக் பாஷா ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய முன்னாள் நிர்வாககுழு தலைவர் சாந்தி,50; துணை தலைவர் அருள்மேரி,45; சங்க ஊழியர்கள் முதுநிலை எழுத்தர் பசுமலை,55; சிற்றெழுத்தர் முருகன், 48; விற்பனையாளர் விஜயராஜ்,50; ஆகியோரை இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான வணிக குற்றப்புலனாய்வு போலீசார், விழுப்புரத்தில் நேற்று கைது செய்தனர்.
பின்னர் 5 பேரையும் செஞ்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
வழக்கில் தொடர்புடைய நிர்வாக குழு உறுப்பினர்கள் 11 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.