Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்

திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்

திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்

திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்

ADDED : செப் 17, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
'திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை' என, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 'குட்டு' வைத்திருக்கிறது. மேலும், 'கோவில் நிதியை, அரசுக்கு வரும் நிதியாக கருதக் கூடாது' என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவில் நிதியில் இருந்து 80 கோடி ரூபாய் செலவில், 27 கோவில்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்' என, அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அரசாணை ரத்து கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவது என்பது, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லை. கோவில் நிதியை மத ரீதியான விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

'கோவில் நிதி என்பது வர்த்தக நடவடிக்கைகளுக்காக அல்ல. அதில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்' எனக் கூறி, கடந்த ஆக., 19ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருமண மண்டபங்களை கட்ட வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தவில்லை.

விசாரணை தேவை


கோவில் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக அவர்கள் காணிக்கை செலுத்தி இருக்கலாம். கோவிலில் திருமண மண்டபங்கள் கட்டி, திருமணங்கள் நடந்தால், அனைத்து விதமான மோசமான பாடல்களும் அங்கே ஒலிக்கும். இதற்காக தான் கோவில் நிலங்கள் இருக்கிறதா?

திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு பதிலாக, அந்த நிதியை கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நற்காரியங்களுக்காக செலவிடலாம்.

இந்த விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு வரவில்லை. இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, மனு தாரர்களுக்கு ஆதரவாக எந்தவொரு இடைக்கால உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் நவ., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .

-டில்லி சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us