ADDED : ஜூலை 12, 2024 06:33 AM
வானுார்: வானுார் அருகே மின்சாரம் தாக்கி மிக்சர் மெஷின் ஆப்பரேட்டர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு ஆற்று தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், 41; இவர், புதுச்சேரி அரியூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம், கடந்த 5 ஆண்டுகளாக மிக்சர் மெஷின் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் கீழ்தளம் ஒட்டும் பணி நடந்தது. அப்போது, மாரியப்பன் மிக்சர் மெஷினை இயக்கிக்கொண்டிருந்தார்.
திடீரென மேலே சென்ற மின் கம்பி மிக்சர் மெஷின் மீது பட்டு, மின் கம்பி அறுந்து மாரியப்பன் மீது விழுந்தது.
இதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட அவரை அப்பகுதியினர் மீட்டு, சிகிச்சைக்காக லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே, மாரியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாரியப்பன் மனைவி கன்னிகா பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.