/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ மருந்து பொருள் எரித்த பணியாளர் தீயில் கருகி பலி: அரசு வேலை கேட்கும் தந்தை மருந்து பொருள் எரித்த பணியாளர் தீயில் கருகி பலி: அரசு வேலை கேட்கும் தந்தை
மருந்து பொருள் எரித்த பணியாளர் தீயில் கருகி பலி: அரசு வேலை கேட்கும் தந்தை
மருந்து பொருள் எரித்த பணியாளர் தீயில் கருகி பலி: அரசு வேலை கேட்கும் தந்தை
மருந்து பொருள் எரித்த பணியாளர் தீயில் கருகி பலி: அரசு வேலை கேட்கும் தந்தை
ADDED : ஜூலை 13, 2024 10:05 PM
திருச்சி:மணப்பாறையில் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க, இறந்தவரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, கே.பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்; இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகன் கலையரசன், 28, மரவனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்த அவர், கொரோனா பரவல் காலத்தில் முன் களப்பணியாளராகவும் இருந்துள்ளார்.
மணப்பாறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கோவில்பட்டி சாலையில் புதியதாக கட்டிடம் கட்டி இடம் மாற்றம் செய்யப்பட்டது.
காலியாக இருந்த பழைய மருத்துவமனையின் ஒரு பகுதியை, புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2023, ஜூன் 26ல் நடந்த சுத்தப்படுத்தும் பணியின் போது, காலாவதியான மருந்துகள், கைவிடப்பட்ட மருந்துகள் மற்றும் பக்கவிளைவு ஏற்படுத்தும் மருந்துகள் போன்றவற்றை மருத்துவமனை வளாகத்தில், கலையரசன் எரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரசாயன பொருட்கள் வெடித்துச் சிதறியதில், தீக்காயம் அடைந்த கலையரசனை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 29ம் தேதி இரவு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மணப்பாறை போலீசார் விசாரித்தனர்.
கலையரசன் இறப்புக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க, அவரது தந்தை அர்ஜுனன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன், அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர் கலையரசன், கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்தில் இறந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு, அரசு தரப்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இது குறித்து அர்ஜுனன் கூறியதாவது:
என்னுடைய மூத்த மகன் கலையரசன், 12 ஆண்டுகளாக கொசு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்தார். மருத்துவ அலுவலர்கள் அவரை, மணப்பாறை மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் பணியில் ஈடுபடுத்தினர்.
அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கலையரசன், திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்று நாள் சிகிச்சைக்கு பின், இறந்தார். அவரது இறப்பு குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
மேலும், மாதம் 14,500 ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். மகன் கலையரசன் இறந்து, ஓராண்டு ஆகி விட்டது. அதனால், மகன் இறப்புக்கு நிவாரணமாக, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நான் வயது முதிர்ந்தவன் என்பதால், இறந்த கலையரசன் மூலமாகத்தான் குடும்பத்துக்கு வருமானம் இருந்தது. வருமானம் இன்றி கஷ்டமான சூழலில் இருப்பதால், என் குடும்பத்தில் இளைய மகனுக்கு அரசு வேலை வழங்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.