ADDED : ஜூலை 12, 2024 04:54 AM
திருச்சி: விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர்கட்சி நிர்வாகியும், யுடியூப்பருமான துரைமுருகன் தமிழக அரசு குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் அவதுாறு பரப்பியதாக நேற்று தென்னகாசியில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை நீதிபதிசாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் சாட்டை துரை முருகனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் விடுவித்துள்ளார்.
இது குறித்து சட்டை துரைமுருகன் கூறியதாவது: 14 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறேன். 15 ஆண்டுகளாக அ.தி.மு.க., மேடைகளில் பாடிய பாடல்களை தான், தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்காட்டி பேசினேன்.
தி.மு.க., அரசு சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்கு போட்டு முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் என் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தோம். என் மீதான வழக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதி என்னை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது என்றார். இந்த அரசு என்னை கொலை செய்ய முயற்சிக்கிறது. எனக்கு பாதுகாப்பு தேவை என்றார்.