/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அறிவியல் பூங்காவை ஆசை தீர பார்க்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு * மரங்களோடு 'பழக' வாய்ப்புஅறிவியல் பூங்காவை ஆசை தீர பார்க்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு * மரங்களோடு 'பழக' வாய்ப்பு
அறிவியல் பூங்காவை ஆசை தீர பார்க்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு * மரங்களோடு 'பழக' வாய்ப்பு
அறிவியல் பூங்காவை ஆசை தீர பார்க்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு * மரங்களோடு 'பழக' வாய்ப்பு
அறிவியல் பூங்காவை ஆசை தீர பார்க்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு * மரங்களோடு 'பழக' வாய்ப்பு
ADDED : ஜன 26, 2024 11:50 PM

திருப்பூர்: 'மனிதர்களே மரங்களை பாதுகாப்பதாக நினைத்திருந்தோம்... ஆனால், மரங்களே மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கின்றன என்பதை அறிந்தோம் என்று ஆனந்த கூத்தாடும் உற்சாகத்துடன் இருக்கிறது, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு.
ஒன்பது ஆண்டில், எண்பது ஆண்டு சாதனை என்பது போல், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவும், 'வனத்துக்குள் திருப்பூர்' குழுவினரால் உருவாக்கப்பட்ட மாநகராட்சி அறிவியல் பூங்காவை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், நாளை நடக்கிறது.
மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் கனவை நனவாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பசுமை திட்டத்துக்கு, 2015 விதை துாவப்பட்டது. கடந்த, 2015ல் துவங்கி, ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரங்கள் எனும், பெரும் செல்வத்தை சேர்த்துள்ளது, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் பசுமைப்படை.
தங்க மகுடத்தில், விலைமதிக்க முடியாத வைரக்கல் பதித்தது போல், மாநகராட்சி அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது, பள்ளி மாணவ, மாணவியருக்கான பல்கலைக்கழகம் போல் பயன்படப்போகிறது.
மூங்கில் தோட்டம்
சின்னக்காளிபாளையத்தை பூர்வீகமாக கொண்ட, ராயல் கிளாசிக் மில்ஸ் சார்பில், 3 கோடி ரூபாய் பங்களிப்பு, சென்னை சில்க்ஸ் குழுமம் டீமேஜ் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில், 25 லட்சம் ரூபாய் உதவி, தமிழக அரசின், 81 லட்சம் ரூபாய் நிதியுதவி என, 4.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12 ஏக்கர் பரப்பில், மாநகராட்சி அறிவியல் பூங்கா எனும் பசுமை கோட்டை கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட, 50 வகையான மூங்கில்களுடன், மூங்கில் தோட்டம் எழிலாக அமைந்துள்ளது. அழியும் தருவாயில் இருந்து மீட்கப்பட வேண்டிய, 20 அரிய வகை மரங்கள்; சிறுவர் பூங்கா; பட்டாம்பூச்சி பூங்கா, தாமரை - அல்லிக்குளம், 200 பேர் அமரும் வசதியுடன் கருத்தரங்கு கூடம், 200 நபர்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆம்பி தியேட்டர்; திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், கடைகள் மற்றும் கழிப்பறைகள், செயற்கை நீரூற்று, பணியாளர் குடியிருப்பு, நீர்த்தேக்க தொட்டிகள் என, சகலவசதிகளுடன் அமைந்துள்ளது.
---------------------------
மகிழ்வுடன் வருக...
பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, இடுவாய் - சின்னக்காளிபாளையத்தில், 12 ஏக்கர் பரப்பில், மாநகராட்சி அறிவியல் பூங்கா உருவாகியுள்ளது. அரியவகை மூங்கில் மற்றும் நாட்டு மரங்களுடன் அமைந்துள்ளது. எழில்மிகு பூங்காவை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 5ம் தேதி திறந்து வைத்தார். பூங்காவை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, நாளை நடக்கிறது. பசுமை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
- சிவராம்
'வெற்றி' அமைப்பு தலைவர்
---
காலியிடத்தில் பசுமை
திருப்பூர் மாவட்டத்தில், சில ஆண்டுகளாக மழைப்பொழிவு அதிகரிக்க காரணம், மரம் வளர்ப்பு அதிகரித்துள்ளது. இதில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது. பொது சுத்திகரிப்பு நிலையங்கள், தினமும், 10 கோடி லிட்டர் அளவுக்கு மறுசுழற்சி முறையில் தண்ணீரை பயன்படுத்துகிறோம். பெய்வது அதிகரித்துள்ளதால், மரம் வளர்ப்பும் அதிகரிக்கும். ஒவ்வொரு சாய ஆலையும், தங்களால் முடிந்த அளவு மரம் வளர்க்க தயாராக இருக்கின்றன. காலியிடமே இல்லாத வகையில், மரங்களை வளர்க்க வேண்டும்.
- காந்திராஜன்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்
---
விழிப்புணர்வு வந்தது...
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் மரங்கள், சிறப்பான சேவையாற்றுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் சிறப்பான சேவையே அதற்கு காரணம். மரம் எண்ணிக்கை அதிகரித்துள்ள பகுதிகளில், பருவநிலையே மாறியுள்ளது. வானம் பார்த்த தரிசு நிலமெல்லாம், இன்று பசுமை கூடாரமாக மாறியுள்ளன. இளைய சமுதாயத்திடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டதால், இனி, மென்மேலும் மரம் வளர்க்கும் பணி அதிகரிக்கும்.
- ஸ்ரீகாந்த்
'டெக்பா' தலைவர்
---
பசுமைக்கு குவியும் பாராட்டு
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் என்பது, இந்தியா மட்டுமல்ல, உலகிற்கே முன்மாதிரியான திட்டம். கடந்த, ஒன்பது ஆண்டுகளில், சிறிய தொய்வும் இல்லாமல், 18 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கின்றனர். கொரோனா காலத்தில், உலகமே கலங்கிய போதும், இடைநில்லாது மரங்களை நட்டு வளர்த்தது போற்றுதலுக்குரியது.
தற்போது, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' என்பது முக்கியமாகி விட்டது. திருப்பூரில், 18 லட்சம் மரம் வளர்த்த தகவல் கிடைத்ததால், சர்வதேச அளவில், திருப்பூருக்கு தனி அந்தஸ்து கிடைக்கிறது. சமீபகாலமாக, வெளிநாட்டு ஆர்டர் விசாரணையின் போது, திருப்பூரில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து வர்த்தர்கள் கேட்டு, பாராட்டுகின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'கிரீன் திருப்பூர் -பிராண்ட் திருப்பூர்' என்ற இலக்குடன் செயல்படுகிறது, அந்த வகையில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு தொழில்நுட்பம், சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை படைத்த திருப்பூர், இன்று மரம் வளர்ப்பதிலும் சாதித்துள்ளது. 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் தலைமையிலான குழு, இமாலய சாதனை புரிந்துள்ளது.
- சுப்பிரமணியன்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்
---
இதுவும் ஒரு பசுமை புரட்சி
தன்னலமில்லாத தொண்டு... அதை மேற்கொள்பவர்கள், இன்று வரை சிறு தொய்வும் இல்லாமல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், அவர்களது வேகமும், முயற்சியும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. பெரிய பசுமை புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். சிவராம் சகோதர்களுக்கு, பாராட்டுக்குரிய எத்தைய விருது கொடுத்தாலும் தகும்.
அனைவரையும் ஒருங்கிணைத்து, தொடர்ச்சியாக, பசுமையை நிலை நிறுத்தி கொண்டிருக்கின்றனர். வனத்துறை, வேளாண்துறை, மரம் பெருக்கு நிறுவனம் என, பல்வேறு அரசுத்துறைகளுடன் கரம் கோர்த்து, வெற்றிகரமாக மரம் நட்டு வளர்க்கின்றனர். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தால், 'சஸ்டெய்னபிள் மாடல்' என்ற பெருமை கிடைத்துள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் முயற்சி, வரும் காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். பசுமைப்பணியில், நாங்களும் சிறு உதவி செய்யும் தருணம் கிடைத்தால் மிகுந்த சந்தோஷம் அடைவோம். நாங்களும் அவர்களுடன் பயணிக்கிறோம் என்பது மிகுந்த பெருமை அளிப்பதாக இருக்கிறது.
- சந்திரன்
'ஈஸ்ட்மேன்' நிறுவன நிர்வாக இயக்குனர்


