/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விஷ வாயு தாக்கி 3 பேர் பலி: 10 நிமிடத்தில் முடிந்த ஆய்வு விஷ வாயு தாக்கி 3 பேர் பலி: 10 நிமிடத்தில் முடிந்த ஆய்வு
விஷ வாயு தாக்கி 3 பேர் பலி: 10 நிமிடத்தில் முடிந்த ஆய்வு
விஷ வாயு தாக்கி 3 பேர் பலி: 10 நிமிடத்தில் முடிந்த ஆய்வு
விஷ வாயு தாக்கி 3 பேர் பலி: 10 நிமிடத்தில் முடிந்த ஆய்வு
UPDATED : மே 23, 2025 07:32 AM
ADDED : மே 23, 2025 12:09 AM

திருப்பூர்: சாய ஆலையில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி, மூன்று பேர் இறந்தது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர், பத்து நிமிடத்தில் ஆய்வை முடித்து விட்டு கிளம்பி சென்றார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - கரைப்புதுாரில் சாய ஆலை நிறுவனத்தில் கடந்த, 19ம் தேதி செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, ஐந்து பேர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர்.
இதில், சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், 30, வேணுகோபால், 31 மற்றும் ஹரிகிருஷ்ணன், 26 என, மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.
விஷவாயு தாக்கிய விவகாரம் தொடர்பாக, பல்லடம் போலீசார் மனித கழிவை கையால் அள்ளும் தடுப்பு சட்டம் உட்பட, நான்கு பிரிவின் கீழ், உரிமையாளர் நவீன், மேலாளர் தனபால், கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் லாரி டிரைவர் சின்னசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.
நேற்று முன்தினம், பொது மேலாளர் தனபால், 50, கண்காணிப்பாளர் அரவிந்த், 47 என, இருவரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சாய ஆலை உரிமையாளர் நவீனை தேடி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட சின்னசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
10 நிமிடத்தில் ஆய்வு
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் டாக்டர் ரவிவர்மன் சம்பந்தப்பட்ட சாய ஆலையை நேற்று ஆய்வு செய்ய வந்தார்.
ஆலைக்குள் சென்ற அவர், மூன்று பேர் இறந்த தொட்டியை பார்வையிட்டு விட்டு பத்து நிமிடங்களில் ஆய்வை முடித்து விட்டு வெளியேறினார். அவருடன், திருப்பூர் ஆர்.டி.ஓ., மோகன சுந்தரம், பல்லடம் தாசில்தார் சபரி, தெற்கு தாசில்தார் சரவணன், டி.எஸ்.பி., சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சுண்டமேட்டில் உள்ள அவர்களின் வீடுகளில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனை தொடர்ந்து, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சின்னசாமியை விடுவிக்க வேண்டும், அவரும் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையருக்கும், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.