/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுகாதாரம் காப்பது காலத்தின் கட்டாயம்! சுகாதாரம் காப்பது காலத்தின் கட்டாயம்!
சுகாதாரம் காப்பது காலத்தின் கட்டாயம்!
சுகாதாரம் காப்பது காலத்தின் கட்டாயம்!
சுகாதாரம் காப்பது காலத்தின் கட்டாயம்!
ADDED : செப் 21, 2025 06:27 AM

'திருப்பூர் மாநகராட்சி எதிர்கொள்ளும் குப்பை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒருமித்த கருத்துணர்வு வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீடு, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்த உரிய இடமில்லாததால், மாநகராட்சி நிர்வாகம் பாறைக்குழிகளை தேடி அலைகிறது; இதற்கு தற்போதைய மாநகராட்சி நிர்வாகம், ஆளும் அரசு, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களை மட்டும் குறை சொல்லி பலனில்லை. காரணம்... இது, இன்று, நேற்றைய பிரச்னையல்ல; பல ஆண்டுகால பிரச்னை.
தற்போதைய ஆளும் அரசும், மாநகராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமின்றி, இதற்கு முன் ஆட்சி பொறுப்பில் இருந்த அரசுகளும், மாநகராட்சியை நிர்வகித்த கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்தே தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மற்றும் இல்லாத எந்தவொரு கட்சியும், மற்ற கட்சிகளை கை காட்டி தப்பிவிட முடியாது.
முற்பகல் செய்யின்... நகரின் பல இடங்களில் உள்ள பாறைக்குழியில், பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கொட்டி வருகிறது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதற்கேற்ப, பல ஆண்டுகளுக்கு முன்பு விதைத்த தீ வினையை, தற்போது மாநகராட்சி மக்கள் அறுவடை செய்யத் துவங்கியிருக்கின்றனர். குப்பை கொட்டப்பட்டுள்ள பாறைக்குழிகளை சுற்றி, நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டிருக்கிறது.
திருப்பூர், முதலிபாளையம் மற்றும் நல்லுார் பகுதியில் உள்ள பாறைக் குழிகளில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவது தொடர்பாக, சமீபத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதம் இதை உறுதிப்படுத்துகிறது.
விதிமீறல் அம்பலம் திருப்பூர், முதலிபாளையம் மற்றும் நல்லுார் பகுதியில் உள்ள பாறைக்குழியில், மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக பல்வேறு குப்பைக்கழிவுகளை கொட்டுவதாகவும், இதனால், அப்பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும், குப்பைகள் எரியூட்டப்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
காற்று மற்றும் நீரின் தரம் ஆய்வு செய்து தருமாறும் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாறைக்குழியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை, முறையாக சேகரித்து தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கையாள வேண்டும்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பிரச்னையை குறிப்பிட்ட மாநகராட்சிக்குரிய, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாறைக்குழி சார்ந்த பிரச்னையாக மட்டும் கருதாமல், ஒட்டு மொத்த மாவட்டம் எதிர்கொள்ளும் பிரச்னையாக தான் அணுக வேண்டும். காரணம், மாநகராட்சி தவிர்த்து, பிற உள்ளாட்சி நிர்வாகங்களில் கூட, குப்பைக் கொட்ட இடமில்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது.
ஊர் கூடினால் கோடி நன்மை
பல்வேறு சிறு, சிறு கிராமங்களை உள்ளடக்கிய மாநகராட்சியாக உருவெடுத்துள்ள திருப்பூர், ஆயத்த ஆடை உற்பத்தித்துறையில் உலக வரைபடத்தில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கிறது. வளர்ந்து வரும் பெருநகரங்களின் வரிசையிலும் இடம் பிடித்திருக்கிறது.
எனவே, ஆண்டாண்டு காலமாக குப்பை அகற்றும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் இருந்ததன் பலன் தான், அதற்கான எதிர்வினையை திருப்பூர் மக்கள் எதிர்கொள்ள துவங்கியிருக்கின்றனர் என்ற உணர்வுடன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அனைத்து கட்சிகள், தொழில் துறையினர், அது சார்ந்த பல்வேறு சங்கங்கள், விவசாய சங்கங்கள், சேவைப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட அமைப்புகள், பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட அரசுத்துறையினர் என, அனைத்து தரப்பினரையும் ஒருமித்த கருத்துக்குள் கொண்டு வந்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஊர்க்கூடி தேர் இழுப்பதை பேன்று, ஊர்க்கூடி செயல்பட்டால் தான், எதிர்கால சந்ததிக்கு சுத்தமான காற்று, நீர், நிலத்தை விட்டுச் செல்ல முடியும் என்பதே, நகர் நல விரும்பிகளின் கருத்து.