/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நேர்மையும் நாணயமும் நிரந்தர வெற்றியை கொடுக்கும்! தொழில்முனைவோருக்கு சாதனையாளர்கள் 'அட்வைஸ்' நேர்மையும் நாணயமும் நிரந்தர வெற்றியை கொடுக்கும்! தொழில்முனைவோருக்கு சாதனையாளர்கள் 'அட்வைஸ்'
நேர்மையும் நாணயமும் நிரந்தர வெற்றியை கொடுக்கும்! தொழில்முனைவோருக்கு சாதனையாளர்கள் 'அட்வைஸ்'
நேர்மையும் நாணயமும் நிரந்தர வெற்றியை கொடுக்கும்! தொழில்முனைவோருக்கு சாதனையாளர்கள் 'அட்வைஸ்'
நேர்மையும் நாணயமும் நிரந்தர வெற்றியை கொடுக்கும்! தொழில்முனைவோருக்கு சாதனையாளர்கள் 'அட்வைஸ்'
ADDED : செப் 21, 2025 06:28 AM

திருப்பூர் : 'நேர்மையும், நாணயமும்தான் அனைத்து தொழிலிலும் நிரந்தர வெற்றியை கொடுக்கும்,' என்று, சாதனையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,), 'யங் இந்தி யன்ஸ்' அமைப்பு சார்பில், 'சைனோகிராப் -3.0' என்ற தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில், திருப்பூரை சேர்ந்த முக்கியபிரமுகர்கள் பேசினர்.
நேர்மையே வெற்றி 'சக்தி' சுப்பிரமணியம், தலைவர், சினிமா தியேட்டர் உரிமை யாளர்கள் சங்கம்:
உயர்ந்த கல்வியோ, பணமோ அல்லது திறமையோ, தொழிலில் உங்களை உயர்த்திவிடாது. உங்களின் நேர்மையும், நாணயமும்தான் உயர்த்தும். நேர்மை மட்டுமே வாழ்க்கையை உயர்வான இடத்துக்கு கொண்டு சேர்க்கும். நம்மை விட பணக்காரர், படித்தவர் இருக்கலாம். நம்மைவிட ஒழுக்கமானவர், நாணயமானவர் இல்லை என்று பேசும் அளவுக்கு, நாணயம் மிகுந்தவராக வாழ வேண்டும்.
நேர்மைதான், வெற்றியின் முதல்படி. இளைஞர்கள், சிறிய வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும், ஒருமணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும். சம்பாதித்த பணம் மட்டும் வாழ்க்கைக்கு பயன்படாது; கடைசிவரை, வாழக்கையில் மாத்திரை எடுக்காமல் வாழ உடற்பயிற்சி அவசியம். படிப்பு, தொழில் என, எதுவாக இருந்தாலும், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இலக்கு நிர்ணயித்து, அதனை சென்றடைய பாடுபட வேண்டும்.
திருப்பூரை நேசிக்கிறோம் திருப்பூர் 'லக்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி ராகுல் டோடி:
கடந்த, 38 ஆண்டுகளுக்கு முன், கொல்கத்தாவில் இருந்து திருப்பூர் வந்தோம்; திருப்பூரில் தொழில் செய்து முன்னேறினோம். 'நம்ம ஊர் திருப்பூர்' என்று கூறுவதில் பெருமை கொள்கிறோம்; திருப்பூரை மிகவும் நேசிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் சமூக பொறுப்பு நிதி வாயிலாக, திருப்பூர் மக்களுக்கு பல்வேறு சேவைப்பணிகளையும் செய்து வருகிறோம். திருப்பூர் எங்களை முன்னேற்றியது, திருப்பூரை எப்போதும் உயர்வாக மதிக்க வேண்டும் என எனது அப்பா கூறுவார். திருப்பூர் சமுதாய வளர்ச்சிக்காக தொடர்ந்து சேவையாற்றுவோம்.
கடன் வாங்க கூடாது சுனில்குமார், துணை தலைவர், மாவட்ட கிளை, இந்திய தொழில் கூட்டமைப்பு:
இளைஞர்கள் சிறிய அளவில் தொழில் துவங்கி, படிப்படியாக வளர்ச்சி பெற வேண்டும். எப்போதும், தொழில் விரிவாக்கத்துக்கு கடன் வாங்கலாம்; தொழில் துவங்க கடன் வாங்கக்கூடாது.
உடல் நலமும் மிக முக்கியம்; தினமும், 1 மணி நேரத்தை உடல் நலனுக்காக ஒதுக்கினால், மீதியுள்ள, 23 மணி நேரமும், உடல் நமக்கு ஒத்துழைக்கும். எத்தகைய தொழிலாக இருந்தாலும் பெற்றோர், மனைவி, குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட வேண்டும்.
வரலாற்றுப் பெருமை எழுத்தாளர் சிவதாசன்:
திருப்பூருக்கு வரலாறு எழுத வேண்டுமென மறைந்த புலவர் ராசு கேட்டுக்கொண்டார். பல்கலை நுாலகங்களில் உள்ள புத்தகங்களை படித்து, பழமையான திருப்பூரின் வரலாறுகளை அறிந்து கொண்டேன்.
மகாபாரத காலத்துடனும், பிற்கால சோழர் பரம்பரையுடனும் திருப்பூருக்கு தொடர்பு உள்ளது. சோழன் செங்கண்ணன், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலை கட்டிய தகவல், 1948ம் ஆண்டு கும்பாபிேஷக அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.
திருப்பூரின் பெருமையை அளவிட முடியாதது. அமெரிக்கா, இங்கிலாந்து வரலாறு நமக்கு முக்கியமல்ல; நமது திருப்பூரின் வரலாற்றை, எதிர்கால சந்ததியினர் அறியச்செய்ய வேண்டும். வரலாற்று பெருமை வாய்ந்த திருப்பூரில், 'திருப்பூர் டே' கொண்டாட வேண்டும்.
தொழிலை வணங்க வேண்டும்
பயபக்தியுடன் சுவாமியை வணங்குவது போல், தொழிலையும் பக்தியுடன் செய்ய வேண்டும். குடும்பமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், கடமைகளை சரிவர செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சி என்பது, தொழில்முனைவோருக்கு அவசியம் தான்; ஒவ்வொரு நிமிடமும் அதே சிந்தனைதான் இருக்க வேண்டும். நாடாக இருந்தாலும், மாநிலமாக இருந்தாலும், மாவட்டமாக இருந்தாலும், வேலை வாய்ப்பு அதிகரித்தால் மட்டுமே குற்றம் குறையும்.
தொழிலாளரை, முதலில் மனிதராக மதிக்க வேண்டும். அவர்களுக்கும், உணர்வு, குடும்பம், ஆசைகள் இருக்கும். அதிக சம்பளம் கிடைக்கும் என்றுதான், புலம்பெயர்ந்த தொழிலாளர் திருப்பூர் வருகின்றனர். அவர்கள் ஊரில், அதே அளவு பணம் கிடைத்தால் மீண்டும் சென்றுவிடுவர். தமிழகத்தை நாடி வரும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். திருப்பூர் சென்றால் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழலாம் என்று வருகின்றனர். உள்ளூர் மக்களும், இணைந்து வாழ்கின்றனர். தொழிற்சாலைகளை தேடிதொழிலாளர் செல்வதை மாற்ற, கள்ளக்குறிச்சி, வேதாரண்யம் போன்ற பகுதிகளில், தொழிற்சாலை நிறுவி வருகிறோம்.
ஆண்டுக்கு, 25 சதவீதம் வளர்ச்சி அவசியம். அதற்கு அதிகமாகவோ, குறையவோ கூடாது. வளர்ச்சி அதிகமாக இருந்தால், உட்கட்டமைப்பின் பின்தங்கிவிடுவோம். திருப்பூரில், பெண் தொழிலாளர் அதிகம் பயன்பெறுகின்றனர். ஆண்கள் வேலைக்கு சென்றால், அந்த குடும்பம் காப்பாற்றப்படும்; பெண்கள் வேலைக்கு சென்றால், அந்த தலைமுறையே பாதுகாக்கப்படும். பெண்கள் பொருளாதாரம் குடும்பத்துக்கு ஆதாரமாக இருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர், எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். 'சரியான வழி, எளிதான வழி' என்று வந்தால், எளிதான வழியை தேர்வு செய்து விடுகின்றனர். சரியான வழியில் செல்ல சிரமாக இருந்தாலும், வெற்றி நிரந்தரமாக இருக்கும்.
- பாலன்,
நிர்வாக இயக்குனர், 'பிரித்வி' நிறுவனம்.