/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவர்களுக்கு பஸ் பாஸ் நடைமுறையில் மாற்றம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் நடைமுறையில் மாற்றம்
மாணவர்களுக்கு பஸ் பாஸ் நடைமுறையில் மாற்றம்
மாணவர்களுக்கு பஸ் பாஸ் நடைமுறையில் மாற்றம்
மாணவர்களுக்கு பஸ் பாஸ் நடைமுறையில் மாற்றம்
ADDED : ஜூன் 13, 2025 10:58 PM

திருப்பூர்; மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கும் நடைமுடையை எளிதாக்க 'எமிஸ்' தளம் மூலம் மாணவர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் பஸ் பாஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக, இலவச பஸ் பாஸ் தமிழக அரசால் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் இணைந்த மாணவ, மாணவியர் விபரங்களை சேகரித்து, பெயர், முகவரி, எங்கிருந்து எங்கு பயணிக்க வேண்டும் என்ற விபரங்களை திரட்டி, தலைமை ஆசிரியர், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் பஸ் வழித்தடத்துக்கு ஏற்ப விண்ணப்பித்தவருக்கு பாஸ் வழங்கி வந்தனர்.
ஒவ்வொரு மாணவர் புதிதாக பள்ளியில் இணையும் போதும், ஒரு முறை பள்ளியில் இருந்து விண்ணப்பம் அனுப்ப வேண்டி இருந்தது; காலதாமதமும் ஏற்பட்டது. இச்சிரமங்களை தவிர்க்க, செயல்பாடுகளை எளிதாக்க, பஸ் பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை போக்குவரத்து கழகம், கல்வித்துறையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி உள்ளது.
என்ன மாற்றம்?
அதன்படி, மாணவ, மாணவியர் விபரங்களை கல்வித்துறை உடனுக்குடன் அப்டேட் செய்து வரும் 'எமிஸ்' இணையதளம் மூலம் மாணவர், மாணவியர் விவரம் பெறப்படும்.
இதில் முன்கூட்டியே தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர் உதவியுடன் மாணவர், மாணவியர் வீடு பள்ளியில் இருந்து எவ்வளவு துாரத்தில் உள்ளது, தொடர்ந்து பஸ்சில் பயணித்து வருபவரா, பாஸ் வேண்டுமா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு, முன்கூட்டியே தகவல்கள் பதிவு செய்யப்படும்.
தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டதன் பேரில், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாணவர், பெயர், போட்டோ, வகுப்பு, பள்ளி, முகவரி, எங்கிருந்து எங்கு பயணிக்கிறார் என்ற விபரத்துடன் மொத்தமாக பிரின்ட் அவுட் பள்ளிக்கு அனுப்பபட்டு விடுகிறது.
அதனை பிரின்ட் எடுத்து ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கி விட முடியும். ஜூலை முதல் வாரத்துக்குள் வழங்கப்படும்
எமிஸ் இணைதள உதவியுடன் பஸ்பாஸ் பெற தகுதியானவர்கள் விபரம் மாவட்ட கல்வித்துறையால், போக்குவரத்து கழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் பணி முடிந்து, ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.