/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்; அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் ஆதங்கம் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்; அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் ஆதங்கம்
ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்; அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் ஆதங்கம்
ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்; அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் ஆதங்கம்
ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்; அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் ஆதங்கம்
ADDED : மே 31, 2025 05:13 AM
திருப்பூர்; ''அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து குடியேறுகின்றனர்.
அவர்களது ரேஷன்கார்டுகள், அவரவர் பகுதியில் உள்ள ரேஷன் கடை களுக்கு மாற்றிக்கொடுக்கப்படாததால், ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது'' என, குடியிருப்புவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன; அவற்றில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
வீடில்லாத ஏழைகள், ஆதர வற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஓடை புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வாழ்ந்து வருவோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளை பெறும் குடியிருப்புவாசிகளில் பலர், வேறு, வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி எல்லைகளில் வசித்து வந்தவர்களாக உள்ளனர்; பிற தாலுகாவை சார்ந்தவர்களாக கூட உள்ளனர்.
தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டு பெற்று, ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், 'ரேஷன் பொருட்கள் உட்பட சிறப்பு திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் பொருட்களை வாங்க, அவர்கள் ஏற்கனவே வசித்த இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கிறது' என, குடியிருப்புவாசிகள் புலம்புகின்றனர். சிலர் தங்கள் ரேஷன் கார்டுகளை, தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாற்றியுள்ளனர்.
திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், பகுதி நேர மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவிநாசி சூளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.
நெருப்பெரிச்சல் அடுக்குமாடி குடியிருப்பில், பகுதி நேர ரேஷன் கடை செயல்படுகிறது; ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அங்கு உள்ள நிலையில், இதை முழு நேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
பலன் தரும் 'ஒரே நாடு;ஒரு கார்டு' திட்டம்
எந்தவொரு பகுதியை சேர்ந்த மக்களும் எந்தவொரு ரேஷன் கடையிலும், ரேஷன் பொருட்களை வாங்க வகை செய்யும் நோக்கில் ஒரே நாடு: ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுகிறது. இடம் பெயர் குடும்பத்தினர் அதிகம் வசிக்கும், திருப்பூரில், இத்திட்டம் சிறப்புற செயல்படுகிறது. வெளியூரை முகவரியாக கொண்ட பலரும், இத்திட்டத்தின் கீழ், தங்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள ரேஷன் கடைகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.
வெளியூர் மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரபிரசாதமாகவே உள்ளது. இதையும் கடந்து, ரேஷன் பொருள் வினியோகத்தில் உள்ள குறைகளை களைய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்பு.