Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அல்லன அழியும்; நல்லன நடக்கும்; நவராத்திரி கொலு வழிபாடு இன்று துவக்கம்

அல்லன அழியும்; நல்லன நடக்கும்; நவராத்திரி கொலு வழிபாடு இன்று துவக்கம்

அல்லன அழியும்; நல்லன நடக்கும்; நவராத்திரி கொலு வழிபாடு இன்று துவக்கம்

அல்லன அழியும்; நல்லன நடக்கும்; நவராத்திரி கொலு வழிபாடு இன்று துவக்கம்

ADDED : செப் 21, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
ந வராத்திரி விழா இன்று தொடங்குகிறது. வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். திருப்பூரில் பல்வேறு வீடுகளில், இல்லத்தரசியர் கொலு வைக்க ஆயத்தமாகியுள்ளனர். இதோ, இல்லத்தரசியர் சிலர் நம்முடன் பகிர்ந்தவை:

நலன்களைப் பெறலாம்

கோமதி, மகாலட்சுமி நகர், பெருமாநல்லுார்:

சிவனுக்கு ஒரு ராத்திரி; சக்திக்கு ஒன்பது ராத்திரி. இந்நாளில் பராசக்தி மட்டும் அனைத்து சக்திகளையும் உள்வாங்கி அமர்கிறார். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் அம்பாள் நமக்குத் தருகிறாள்.

அம்பாளின் ரூபங்களாகிய மகாலட்சுமி, சப்த மாதர்கள், அஷ்டலட்சுமி போன்றவற்றை கொலுவாக வைத்துள்ளோம். நம் வாழ்வியல் நடைமுறைகளான திருமணம், சீமந்தம், பள்ளிக்கூடம் போன்றவற்றையும் இந்தாண்டு புதிதாக வைத்துள்ளோம். ஒரு மனிதனுக்குத் தேவையான கல்வி, செல்வம், வீரம் ஆகிய நலன்கள் பெறவே கொலு வைத்து வழிபடுகிறோம்.

ஒன்றிணைந்த வழிபாடு

அகிலா, கருவம்பாளையம்:

பாரம்பரியமாக கொலு வைப்பதை பின்பற்றி வருகிறோம். வீட்டில் நேர்மறை ஆற்றல் வருகிறது. நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வந்து வழிபடுவர்.

தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பரிசு போன்றவற்றைக் கொடுப்போம். அனைவரையும் அழைத்து, லலிதா சஹஸ்ரநாமம், தேவி மகாத்மியம் போன்றவற்றைப் படித்து வழிபடுவோம்.

பிள்ளையார், முருகன், ராமர், கிருஷ்ணலீலா, காவடி, பிரம்மோற்சவம், முப்பெருந்தேவியர்,விஸ்வரூபம், பாலா திரிபுரசுந்தரி, வாராஹியம்மன், ஆறுமுகன் போன்ற தெய்வங்களை கொலுவாக வைத்துள்ளோம். பொம்மைகளை நுாற்றுக்கும் மேலான எண்ணிக்கையில் வைத்துள்ளோம்.

ஆண்டுக்கு ஒரு கொலு பொம்மையை புதிதாக சேர்த்துக்கொள்வோம். இந்தாண்டு ஆறுமுகன், குருவாயூரப்பனைச் சேர்த்துள்ளோம்.

எண்ணம் நிறைவேறும்

இந்து, காந்தி நகர்:

வீடு கட்டும் எண்ணம் கொண்டவர்கள் கிரகப்பிரவேச செட் கொலு வைக்கலாம். குழந்தையில்லாதவர்கள் வளைகாப்பு செட் வைக்கலாம். நாம் எதிர்பார்க்கும் எதை வேண்டுமானாலும் கொலுவாக வைக்கலாம்.

நினைத்தது நடக்கும். கொலுவால் மன அமைதி கிடைக்கும், நேர்மறை எண்ணங்கள் தோன்றும். எங்கள் வீட்டில் கிரகப்பிரவேசம், அஷ்டலட்சுமி, ஜெகன்நாதர் போன்ற செட்களும் குழந்தைகள் விரும்பும் கேரம், கிரிக்கெட், பஞ்சுமிட்டாய் செட்கள், சிவன், பெருமாள், ஆண்டாள், வராஹியம்மன், விநாயகர் போன்ற தெய்வங்கள் என 40க்கும் மேற்பட்ட கொலுக்கள் வைத்துள்ளோம். கொலு வைப்பவர்கள் கலசம் வைக்க வேண்டும்.

தேங்காய் அல்லது தெய்வமுகம் எடுத்துவந்து அதில் கலசம் வைத்து நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

ஜெயஸ்ரீ, ஏ.வி.பி., லே-அவுட்:

நவராத்திரி, மகாளய அமாவாசைக்குப் பின் வரும். பாரத தேசம் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. பெண்கள் இல்லாமல் உலகம் இயங்காது என்பதை இது குறிப்பாக உணர்த்துகிறது.

ஒற்றைப்படையில் படியமைத்து பொம்மைகள் வைப்பர். அக்கம் பக்கத்தினரை அழைத்து வெற்றிலை, பாக்கு, பிரசாதம் போன்றவற்றை கொடுப்பதால் இது சமூக ஒற்றுமையையும் குறிக்கிறது.

புராண ரீதியாகப் பார்த்தாலும் மஹிஷாசுரன் என்னும் அசுரனை தேவி வதம் செய்ததாலும், ராவணனை ராமன் வதம் செய்ததாலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இனிமையாகக் கொண்டாடி இறைவன் அருளைப் பெறுங்கள்.

புவனேஸ்வரி, பட்டிமன்ற பேச்சாளர்:

நவராத்திரி என்பது பெண்களுக்குரியது. ஒன்பது நாட்களும் பெண் தெய்வத்தையே வழிபடுகிறோம். வீரத்திற்காக முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், செல்வத்திற்காக அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கல்விக்காக கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம். வாழ்க்கையில் படிப்படியாக உயர்வதையும் உயிரினங்களின் அறிவின் அடிப்படையிலும் ஒன்பது படிகளாக வைத்து வழிபடுவர்.

ஒவ்வொரு படிகளிலும் மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளை வைப்பர். மண்ணிலே பிறந்து மண்ணிலே இறப்பதைக் குறிக்க மண் பொம்மைகள், படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதற்காக படிகள் வைக்கப்படுகின்றன.

ஒன்பது அறிவுகளைக் குறிப்பதற்காக ஒன்பது படிகள் வைக்கப்படுகின்றன. ஆறறிவு மனிதன் வரை அனைவரும் அறிந்ததே. ஏழாம் அறிவு சித்தர்களுக்கும் எட்டாம் அறிவு தேவர்களுக்கும் ஒன்பதாம் அறிவு தெய்வங்களுக்கும் உண்டு. மனிதனால் ஏழாம் - எட்டாம் - ஒன்பதாம் அறிவைப் பெற முடியும்.

வழக்கமாக நாம் கோவிலுக்கு சென்று தெய்வங்களை வழிபடுவோம். மாறாக நவராத்திரியின்போது ஒன்பது நாட்கள் வீட்டில் விரதமிருந்து வழிபடுவதால் வீட்டில் பெண் தெய்வம் வரும் என்பது ஐதீகம். இந்த ஒன்பது நாட்களில் என்ன வேண்டினாலும் நடக்கும். ஒன்பது நாள் பூஜை முடித்துவிட்டால், வாழ்வில் உள்ள அனைத்து தீயவைகளும் விலகி நன்மை மட்டுமே உண்டாகும்.

நல்லவைகளை சேர்த்துக் கொள்வது போல ஆண்டுதோறும் புதிய கொலுவையும் சேர்த்துக் கொண்டு வழிபடுதல் சிறந்தது. வீட்டில் தெய்வங்கள் வைத்து, கோவிலாக மாற்றும் இவ்விழாவை அனைவரும் நன்றாகக் கொண்டாட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us