/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உயிர் பெறாத உரக்கிடங்கு: வீணாகும் மக்கள் வரிப்பணம்! உயிர் பெறாத உரக்கிடங்கு: வீணாகும் மக்கள் வரிப்பணம்!
உயிர் பெறாத உரக்கிடங்கு: வீணாகும் மக்கள் வரிப்பணம்!
உயிர் பெறாத உரக்கிடங்கு: வீணாகும் மக்கள் வரிப்பணம்!
உயிர் பெறாத உரக்கிடங்கு: வீணாகும் மக்கள் வரிப்பணம்!
ADDED : மார் 22, 2025 11:00 PM

பல்லடம்: பல லட்சம் ரூபாய் செலவழித்த பின்னும், ஊராட்சிகளில் உள்ள மண்புழு உரக்கிடங்குகள் உயிர் பெறாமல் இருப்பதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, மண்புழு உரங்கள் மிகவும் பயனளிக்கின்றன. இவ்வாறு, விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், மண்புழு உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டன.
இவை, அந்தந்த ஊராட்சிகள் மூலம் பராமரிக்கப்பட்டு, இவற்றில் கிடைக்கும் மண்புழு உரங்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டது. கடந்த, 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இத்திட்டம், ஊராட்சிகளால் சரிவர பின்பற்றப்படவில்லை. பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள மண் புழு உரக்கிடங்குகள், பயன்பாடின்றி கைவிடப்பட்டன. இவ்வாறு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு, பயன்பாடற்றுக்கு கிடந்த உரக்கிடங்குகளுக்கு, கடந்த ஆண்டு மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இவ்வாறு, பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்ட பின்னும், மண்புழு உரக்கிடங்குகள் உயிர் பெறவில்லை.
மாறாக, முந்தைய காலத்தில் எப்படி இருந்ததோ, அதே நிலைக்கு மீண்டும் மாறிவிட்டன. பல உரக்கிடங்குகளில், உரங்களுக்கு பதிலாக, மது பாட்டில்களும், குப்பை குவியல்களும் தான் கிடக்கின்றன. விவசாயிகளின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால், எதிர்பார்த்த அளவு விவசாயிகள் பயனடைந்ததாக தெரியவில்லை.
இருப்பினும், பயன்பாடற்று கிடக்கும் உரக்கிடங்குகளுக்கு எதற்காக மீண்டும் மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் தான் தேவையின்றி வீணடிக்கப்பட்டு வருகிறது. பயனளிக்காத இத்திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் செலவழிப்பதற்கு பதில், மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ளலாம்.
ஊராட்சிகளில் உள்ள மண்புழு உரக்கிடங்குகள் உண்மையில் விவசாயிகளுக்கு பயனளிக்கிறதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பயன்படாத உரக்கிடங்குகளை இழுத்து மூடுவதே சிறந்தது.