/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேருக்கு பெருமை சேர்த்த விழுது ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் ஈகை! வேருக்கு பெருமை சேர்த்த விழுது ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் ஈகை!
வேருக்கு பெருமை சேர்த்த விழுது ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் ஈகை!
வேருக்கு பெருமை சேர்த்த விழுது ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் ஈகை!
வேருக்கு பெருமை சேர்த்த விழுது ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் ஈகை!
ADDED : மே 24, 2025 11:10 PM

காலையில் செய்த நன்றியை மதியத்துக்குள் மறந்து போகும் காலத்தில் வசித்து வருகிறோம். ஆனால், எப்போதோ செய்தவற்றை நன்றியுடன் நினைத்து பார்க்கும் சிலரால் இன்றளவும் மழை பொழிகிறது என்று பெரியோர் சொல்லிக் கேட்கலாம். அவ்வரிசையில், தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் நினைவாக ஊக்கத்தொகை வழங்கி, ஆசானுக்கு நன்றியை காணிக்கையாக்கி உள்ளார் பல்லடத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர்.
பல்லடம் அரசு மேல் நிலைப்பள்ளியில், 1980ம் ஆண்டு காலகட்டத்தில் படித்தவர் சிவகுமார். தற்போது, அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தான் படித்த அரசு பள்ளியையும், தனக்கு கற்பித்த ஆசிரியரையும் மறக்காமல் உள்ள சிவகுமார், தற்போது நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சத்யேஸ்வரன் என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கி, குருவின் மீது தான் வைத்துள்ள மரியாதையை வெளிக்காட்டினார்.
நெகிழ்ச்சி நிறைந்த இந்நிகழ்ச்சி குறித்து, பல்லடம் பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது இப்படி சிலாகிக்கிறார்...
பல்லடம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் சிவகுமார், பூப்பந்தாட்ட குழுவிலும் உள்ளார். சேடபாளையத்தை சேர்ந்த இவர், படித்த காலகட்டத்தில் போதிய வசதி வாய்ப்புகள் இன்றி சிரமப்பட்டார். அப்போது, ஏ.என்.எஸ்., என்று அழைக்கப்படும் சுப்பிர மணியம் ஆசிரியர்தான் இவரது படிப்புக்கு மிகவும் உதவியுள்ளார். தொடர்ந்து, உயர்கல்வி முடித்து, தற்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு உதவுமாறு சிவக்குமாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் சுப்பிரமணியம் காலமாகிவிட்ட நிலையில், அவரது நினைவாக, ஏ.என்.எஸ்., நினைவு ஊக்கத்தொகை என்ற பெயரில் மாணவன் சத்தியேஸ்வரனுக்கு வழங்குவதுடன், ஆண்டுதோறும் இதே போல், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் சிவகுமார் உறுதியளித்துள்ளார்.
கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளிக்காத இன்றைய காலகட்டத்தில், தனக்கு கற்பித்த ஆசிரியர் காலமான பின்னும், அவர் செய்த உதவியை மறக்காமல், அவரது நினைவாக, முன்னாள் மாணவர் சிவகுமார், தனக்கு கற்பித்த ஆசிரியர் நினைவாக ஊக்கத்தொகை வழங்கி ஆசிரியருக்கு பெருமை சேர்த்துள்ளது, பல்லடம் வட்டார கல்வி ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.