ADDED : ஜூலை 18, 2024 12:08 AM

பல்லடம்: 'செம்மண்ணில் விழுந்த விதையாக இருக்க வேண்டும்,' என, பல்லடம் அருகே, நடந்த முப்பெரும் விழாவில், பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் அடுத்த, கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, இலக்கிய மன்றத் துவக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை அம்சவேணி தலைமை வகித்தார்.
மதுரையைச் சேர்ந்த பேச்சாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: உலகி லேயே, 70 சதவீத இளைஞர் சக்தி கொண்ட ஒரே நாடு நமது இந்திய நாடு. நுாறு இளைஞர்களை கொடுங்கள் என விவேகானந்தர் கூறினார். நமக்கு நுாறு இளைஞர்கள் வேண்டாம்; நுாறு விவேகானந்தர்கள் தேவை.
நாம் பேசும் நல்ல விஷயங்கள், மாணவர்களாகிய உங்கள் காதுகளில் ஏதோ ஒரு வகையில் சென்று பயனளிக்க வேண்டும். நம்மை திருத்திக் கொண்டால் விளக்காக எரிந்து ஒளியூட்ட முடியும். எல்லா விதைகளும் மரமாகி விடாது. செம்மண்ணில் விழுந்த விதைகளுக்கு வீரியம் வந்து விட்டால் அவை விருட்சமாகி விடுகின்றன. எனவே, நீங்கள் செம்மண்ணில் விழுந்த விதையாக இருக்க வேண்டும்.
நல்ல விஷயங்கள் நமக்குள் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே கடவுள் காதுகளை மூடவில்லை. ஊசி எப்படி துணியின் கிழிசல்களை தைக்கின்றதோ அதுபோல், நல்ல நுால்கள் நம் உள்ளே செல்லும்போது நம் இதயத்தின் கிழிசல்களை தைக்கிறது. நம்மால் படிக்க முடியாதவற்றைக்கூட கேட்கும்போது புரிந்து கொள்வதால் மாற்றம் உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஊசி எப்படி துணியின் கிழிசல்களை தைக்கின்றதோ அதுபோல், நல்ல நுால்கள் நம் உள்ளே செல்லும்போது நம் இதயத்தின் கிழிசல்களை தைக்கிறது