கலப்பட டீத்துாள் கண்டறிய எளிய வழி
கலப்பட டீத்துாள் கண்டறிய எளிய வழி
கலப்பட டீத்துாள் கண்டறிய எளிய வழி
ADDED : ஜூன் 24, 2024 01:28 AM

திருப்பூர்;எளியமுறையில் கலப்பட டீ துாளை கண்டறிந்து, பயன்பாட்டை தவிர்க்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், திருப்பூர் - தாராபுரம் ரோடு பகுதியில் ஆய்வு நடத்தினர். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே, ஒரு கடையில் கலப்பட டீத்துாள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதனடிப்படையில் ஆய்வு நடத்தியபோது, 156 கிலோ கலப்பட டீ துாள் சிக்கியது. இதையடுத்து, கலப்பட டீத்துாளை கண்டறிவது குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
எப்படி கண்டறிவது?
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை அறிக்கை:
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிவதற்கான எளிய முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. டீ துாள் கலப்படத்தை சுலபமாக கண்டறியும் வழிகள் உள்ளன.
கண்ணாடி டம்ளரில் குடிநீரை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் அளவு டீ துாளை சேர்க்கவேண்டும். கலப்படம் இல்லாத நல்ல டீ துாளாக இருந்தால், நீரில் எவ் விதமான நிற மாற்றமும் ஏற்படாது. செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட டீ துாளாக இருந்தால், தண்ணீர், ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக மாறி விடும்.
உறிஞ்சு தாளின்மீது (டிஷ்யூ பேப்பர்) டீ துாளை வைத்து, அதன்மீது சிறிதளவு தண்ணீர் சேர்க்கவேண்டும். தாளின் நிறம் மாறவில்லையெனில், நல்ல டீ துாள்; ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக மாறினால், செயற்கை நிறமி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யலாம்.
கண்ணாடி தட்டில் சிறிதளவு தேயிலைகளை எடுத்து, காந்த துண்டை வைத்து நகர்த்தவேண்டும். கலப்பட தேயிலை எனில், காந்தத்தில் இரும்பு துகள் இருக்கும்.
கலப்படம் தவிருங்கள்
பொதுமக்கள், பேக்கரி, டீ ஸ்டால் வைத்திருப்போர், கலப் படமான டீத்துாளை கண்டறிந்து, தவிர்க்க வேண்டும். கலப் படமில்லாத, நல்ல டீ துாள் மட்டுமே வாங்கி பயன்படுத்தவேண்டும். கலப்பட டீத்துாள் விற்பனை செய்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட டீத்துாள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகார் அனுப்பிவைக்கலாம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.