ADDED : ஜூன் 24, 2024 01:28 AM

திருப்பூர்;திருப்பூர் - கோவை ரயில் வழித்தடத்தில் வஞ்சிபாளையம், காவிலிபாளையம் பிரிவு, காலேஜ் ரோடு, கல்லாங்காடு சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட தேவையான இடங்களில் 'டிராக்' மாற்றியமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
இதற்காக, புதிதாக நவீனத்துடன் தண்டவாளங்களை தயார்படுத்தும் பணி திருப்பூரில் துவங்கி நடந்து வருகிறது.
ரயில்வே பொறியியல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
திருப்பூர் ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம் உள்ளது. இதுதவிர, திருப்பூர் ஸ்டேஷனில், நிற்காமல் மெயில், சூப்பர்பாஸ்ட் ரயில்கள் செல்ல, இரண்டு மெயின் லைன் உள்ளது. மெயின் லைன், சப்-லைன் இடையே பாயின்ட், சிக்னல் மாற்றும் போது ரயில்கள் வேகம் குறைவதை தடுக்க, புதிதாக நவீன தண்டவாளங்கள் நிறுவப்பட உள்ளது.
இதற்காக கான்கிரீட் துாண், சிலாப், இரும்பு கார்டர் கம்பிகளை கொண்டு தண்டவாளங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளங்கள் தயாரான பின், கிரேன் உதவியுடன் பொருத்தப்படும். திருப்பூரை கடந்து செல்லும் சில ரயில்கள் வேகம், 110 கி.மீ., ஆக உள்ளது. இதை, 130 கி.மீ., ஆக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியதால், புதிய தண்டவாள பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கறினர்.