/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பின்னியெடுக்கும்' பிரச்னைகள்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள் 'பின்னியெடுக்கும்' பிரச்னைகள்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்
'பின்னியெடுக்கும்' பிரச்னைகள்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்
'பின்னியெடுக்கும்' பிரச்னைகள்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்
'பின்னியெடுக்கும்' பிரச்னைகள்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்
ADDED : ஜூன் 29, 2024 02:12 AM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நான்கு மாதங்களுக்கு பின் நேற்று நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம்:
மக்கள் அதிருப்தி
* திவாகரன் (தி.மு.க.,):
மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறை உள்ளது. ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நஞ்சப்பா பள்ளி சுற்றுச் சுவர் உயர்த்த வேண்டும். ஜெய்வாபாய் பள்ளி கழிவு நீர் முறையாக செல்ல வடிகால் கட்ட வேண்டும்.
* கவிதா (தி.மு.க.,): சமுதாயக் கூடம் கட்ட வேண்டும். கழிவுநீர் வடிகால்கள் பல பகுதிகளில் அமைக்க வேண்டும்.
* லோகேஸ்வரி (தி.மு.க.,): குப்பை வண்டிகள் முறையாக இயக்குவதில்லை. நாய் பிடிக்கும் வாகனம் வருவதில்லை.
*கோபால்சாமி (தி.மு.க.,): அறிவொளி நகர் நுண்ணுர உற்பத்தி மையம் எதிர்ப்பு காரணமாக இயங்காமல் இருந்தது. தற்போது மீண்டும் செயல்படுகிறது. ஈக்கள் தொல்லை என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மக்கள் ஏளனச் சிரிப்பு
* ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): இரண்டு ஆண்டாக புது வரி விதிக்காமல் உள்ளது. உரிய வழிகாட்டுதல் இல்லை. விதிமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும்.
* செந்தில்குமார் (காங்.,):
எனது வார்டில் புதிய கான்கிரீட் ரோடு அமைத்து சில நாட்களில் பல அடி நீளத்துக்கு குழி தோண்டி, குழாய் பதித்து வருகின்றனர். இதனை பார்த்து மக்கள் ஏளனமாக சிரிக்கின்றனர். நிதி ஆதாரம் வீணாகிறது. பணியில் ஒருங்கிணைப்பு இல்லை.
அலுவலரை பெயர் சொல்லியும், ஒருமையிலும் ஒப்பந்ததாரர்கள் அழைக்கும் நிலை உள்ளது. எங்கு பார்த்தாலும் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரு நொடியில் நாய்க்கடியிலிருந்து தப்பினேன். நிரந்தர தீர்வு காண வேண்டும்.
* நாகராஜ் (ம.தி.மு.க.,): குப்பை வண்டிக்கு டீசல், பேட்டரி, டயர் இல்லாமல் நிற்கிறது. இது குறித்து கேட்டால் உடனே அனுப்புகிறோம் என்று கூறிச் செல்லும் பொறுப்பாளர்கள் மாயமாகி விடுகின்றனர்.
சாலையில், குழி தோண்டிய இடிபாடுகள் அகற்றாமல் ரோட்டில் கிடக்கிறது. வரி விதிப்புக்கு ஏன் தாமதம் செய்கின்றனர் என தெரியவில்லை. குடிநீர் தொட்டி வளாகங்களில் காவலர் நியமிக்க வேண்டும். அங்கு 'கஞ்சா' நபர்கள் நடமாட்டம் உள்ளது.
12 நாளாக குடிநீர் இல்லை
* குணசேகரன் (பா.ஜ.,): மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று மாநகராட்சியில் பணி செய்ய வேண்டும்.எனது வார்டில் குழாய் பதிப்பு பாதியில் நிற்கிறது. கேட்டால் பணம் வரவில்லை என்கின்றனர்.
* சேகர் (அ.தி.மு.க.,): காலேஜ் ரோட்டில் குடிநீர் வீட்டு இணைப்பு பெற்றுக் கொண்டு, வணிகரீதியாகப் பயன்படுத்துகின்றனர். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
* செழியன் (த.மா.கா.,): நல்லாத்துப்பாளையம் வரை மழை நீர் வடிகால் கட்டியுள்ளனர். ஆனால், மழைநீர் அதில் செல்ல குழாய் பதிக்கவில்லை. முன் போலவே மழை நீர் ரோட்டில் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. குடிநீர் சப்ளை செய்து, 12 நாளாகிறது. என் வார்டு ஏன் புறக்கணிக்கப்படுகிறது?
இவ்வாறு விவாதம் நடந்தது.