ADDED : ஜூன் 03, 2024 01:14 AM
திருப்பூர்;தென்மேற்கு பருவம் துவங்கியதையடுத்து, திருப்பூரில் நேற்று பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
திருப்பூரில், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. மே மாதம் இரண்டாவது வாரத்துக்குப்பிறகு, கோடை மழை பெய்து, குளிர்வித்தது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவம் துவங்கியுள்ளது. திருப்பூரில் நேற்றுமுன்தினம் மாலை, இடி இடித்தது. பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில், லேசான துாறலுடன் நின்றது.
நேற்று, காலை முதல் மதியம் வரை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை, 4:00 மணிக்குப்பின், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:15 மணியளவில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
ஆலங்கட்டி மழை
செங்கப்பள்ளி சுற்றுப்பகுதிகளில், ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதிலும், பூமியை குளிர்வித்து, நிலத்தடி நீர்மட்டம் உயரச்செய்வதி லும் தென்மேற்கு பருவ மழை முக்கியத்துவம் பெறுகிறது. திருப்பூரில், கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சிறப்பாக பெய்து, ஆறு, குளம், அணை உள்ளிட்ட நீர் நிலைகளை பெருகச்செய்து தங்கள் மனதை குளிர்விக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் பிறந்துள்ளது.