Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு 'மவுசு' வந்தாச்சு!

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு 'மவுசு' வந்தாச்சு!

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு 'மவுசு' வந்தாச்சு!

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு 'மவுசு' வந்தாச்சு!

ADDED : ஜூன் 04, 2024 12:27 AM


Google News
திருப்பூர்;திருப்பூரில் கோடை வெப்பம் குறைந்தது போல், கோடை கால ஆர்டர்கள் முடிந்ததால், குளிர்கால ஆர்டர் மீதான, செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தி துவங்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து, பல்வேறு நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ஆண்டுக்கு, 1.29 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. அவற்றில், பின்னலாடைகள் பங்களிப்பு மட்டும், 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது.

நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், 55 சதவீதமாக இருக்கிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நுாலிழை பின்னலாடைகள், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கொரியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன், சவூதி அரேபியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடையில், 70 சதவீதம் கோடைகால ஆர்டர்களை சார்ந்தே உள்ளன. குறிப்பாக, பருத்தி நுாலிழை ஆடைகளுக்கு சர்வதேச சந்தைகளில் வரவேற்பு அதிகம். போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், 70 சதவீதம் செயற்கை நுாலிழை, 30 சதவீதம் பருத்தி ஆடைகள் என்ற வகையில் வர்த்தகம் நடக்கிறது.

நமது நாட்டில், 70 சதவீதம் பருத்தி ஆடை; 30 சதவீதம் செயற்கை நுாலிழை என்ற வகையில் உள்ளது. செயற்கை நுாலிழையிலேயே, மூங்கில், விஸ்கோஸ், வாழைநார் உள்ளிட்ட இயற்கை சார் செயற்கை நுாலிழைகள்; பாலியஸ்டர் மற்றும் மறுசுழற்சி நுாலிழைகள் என, இருவகையான செயற்கை நுாலிழைகள் உள்ளன.

செயற்கை நுாலிழை ஆடை


நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியை மேம்படுத்த, செயற்கை நுாலிழை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம். அதன்படி, கடந்த, 2022 முதல், திருப்பூரிலும், செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தி தலையெடுத்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து பாலியஸ்டர் பேப்ரிக் இறக்குமதி செய்த நிலைமாறி, திருப்பூரிலேயே நிட்டிங் செய்து, சாயமிடும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. கடந்த ஜன., மாதம் துவங்கி, மே இறுதிவரை, கோடை கால ஆர்டர் வரத்தும், சரக்கு அனுப்புவதும் மும்முரமாக நடந்து வந்தது. மேலும் இருவாரங்களுக்கும், கோடை கால ஆர்டர் அனுப்பும் பணி நீடிக்கும். தற்போதிருந்தே, குளிர்கால ஆர்டர் வரத்தும், உற்பத்தியும் சமகாலத்தில் துவங்கியுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

கோடை கால ஆர்டர் வரத்து சாதகமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், குளிர்கால ஆர்டர்களும் வந்துள்ளன. குளிர்கால ஆர்டர் உற்பத்தி, செயற்கை நுாலிழை சார்ந்ததாக இருக்கும். கடந்த ஆண்டை காட்டிலும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு அதிக ஆர்டர் பெறப்பட்டுள்ளது.

வரும், அக்., மாதம் வரை, குளிர்கால ஆர்டர் மீது உற்பத்தி தொடரும். அதன்பின், அக்., முதல் வாரத்தில் இருந்தே, கோடைகால ஆர்டர் மீதான விசாரணை துவங்கி விடும்.

கடந்த காலங்களை காட்டிலும், செயற்கை நுாலிழை மூலம் தயாரிக்கப்படும், குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர், இந்தாண்டு அதிகம் வந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us