Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நஞ்சராயன் குளத்தில் சுற்றுலா மேம்பாடு! அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

நஞ்சராயன் குளத்தில் சுற்றுலா மேம்பாடு! அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

நஞ்சராயன் குளத்தில் சுற்றுலா மேம்பாடு! அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

நஞ்சராயன் குளத்தில் சுற்றுலா மேம்பாடு! அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

ADDED : ஜூன் 04, 2024 12:27 AM


Google News
திருப்பூர்;நஞ்சராயன் பறவைகள் சரணாலய பகுதியை, சுற்றுலா தலமாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்கான பணியில் வனம் மற்றும் சுற்றுலா துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில், 440 ஏக்கர் பரப்பளவில், நஞ்சராயன் குளம் பரந்து விரிந்திருக்கிறது; ஆண்டு முழுக்க நீர் நிரம்பியிருக்கும் இக்குளத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடு பறவையினங்கள் அதிகளவில் வந்து செல்வதால், கடந்த, 2022ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இங்கு சுற்றுலா சார்ந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், வனச்சரக அலுவலர் சுரேஷ், திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு சங்க தலைவர் பூபதி, நிர்வாகிகள் நவீன், சந்தோஷ் மற்றும் திருப்பூர் இயற்கை கழக நிர்வாகிகள் ஆகியோர் நேற்று குளப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

ரூ. 7.5 கோடியில்திட்ட அறிக்கை


முதற்கட்டமாக வனத்துறை சார்பில், 7.50 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுலா மேம்பாடு பணி தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, குளக்கரையை சுற்றிவேலி; முகப்பு பகுதியில் நுழைவுவாயில் அமைப்பது.

நடைபாதை, தகவல் விளக்கக்கூடம், ஆவண மையம், நுழைவு சீட்டு வழங்குமிடம், சூழல் வணிக வளாகம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் பூங்கா, கண்காணிப்பு கோபுரம், வந்து செல்லும் பறவைகளுக்கு மர வீடு, குடிநீர் வசதி, கழிப்பறை, வாகன பார்க்கிங் தளம் உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த, திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கைகோர்க்கும்சுற்றுலா துறை!


திருப்பூர் மாவட்ட சுற் றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறியதாவது:

நஞ்சராயன் குளம் பகுதியில் சுற்றுலா மேம்பாடு பணிகளுக்கு வனத்துறை சார்பில் கேட்கப்பட்டுள்ள நிதி கிடைக்கும் என, நம்புகிறோம். திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பணிகள் அனைத்தையும் செய்து முடிக்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டால், அதுதொடர்பாக வனத்துறையினர் கருத்துரு வழங்கும் பட்சத்தில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நிதி பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கெள்ளப்படும்.

நஞ்சராயன் குளம் அருகே, சுக்ரீஸ்வரன் கோவில் உள்ளது; மாதந்தோறும், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்களில், பக்தர்கள் எண் ணிக்கை அதிகரிக்கிறது. நஞ்சராயன் குளம் மேம்படுத்தப்படும் பட்சத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், குளத்தை பார்த்து ரசிக்க இயலும்.

சுற்றுலா வளர்ச்சியடையும் போது, வேலை வாய்ப்புக்கான சூழலும் அமையும். பறவை ஆராய்ச்சியாளர்கள், அவை தொடர்பான ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மிகுந்து பயன்தருவதாக இருக்கும். குளத்தில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றுவது தொடர்பாகவும், வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us