Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரம்; தக்காளி விவசாயிகள் எதிர்பார்ப்பு

நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரம்; தக்காளி விவசாயிகள் எதிர்பார்ப்பு

நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரம்; தக்காளி விவசாயிகள் எதிர்பார்ப்பு

நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரம்; தக்காளி விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 12, 2025 10:37 PM


Google News
உடுமலை; விலை வீழ்ச்சியால், தக்காளி சாகுபடியாளர்கள் பாதிப்பதை தவிர்க்க, நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரத்தை உடுமலை பகுதிக்கு ஒதுக்கீடு செய்து, பொருட்களை சந்தைப்படுத்தவும் அரசு உதவ வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஒவ்வொரு சீசனிலும், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

வீரிய ரக விதைகள், சொட்டு நீர் பாசனம், நாற்று நடவு உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களால், மகசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், அறுவடைக்காலங்களில், தக்காளிக்கு விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. தக்காளியை பறித்து, சந்தைக்கு கொண்டு வரும் செலவுக்கு கூட, விலை கிடைக்காத போது, தக்காளியை ரோட்டோரத்தில், வீணாக வீசியெறியும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, வேளாண் பல்கலை., வழிகாட்டுதலுடன், பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அது குறித்த போதிய விழிப்புணர்வு இப்பகுதி விவசாயிகளிடையே இல்லை. தற்போதைய சீசனிலும், தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, 2017--18ல் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்து மதிப்புக் கூட்டுவதற்காக, தமிழகத்தில், 5 நடமாடும் தக்காளி மதிப்புக்கூட்டும் இயந்திரம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள, திருப்பூர் மாவட்டம், உடுமலைக்கும் இந்த நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரத்தை ஒதுக்கீடு செய்து, மதிப்பு கூட்டு பொருளை சந்தைப்படுத்தவும் அரசு உதவ வேண்டும் என, தக்காளி சாகுபடியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us