Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழாய் உடைந்து  வெளியேறிய சாயக்கழிவுநீர்; 13 சாய ஆலைகளின் இயக்கம் நிறுத்தம் 

குழாய் உடைந்து  வெளியேறிய சாயக்கழிவுநீர்; 13 சாய ஆலைகளின் இயக்கம் நிறுத்தம் 

குழாய் உடைந்து  வெளியேறிய சாயக்கழிவுநீர்; 13 சாய ஆலைகளின் இயக்கம் நிறுத்தம் 

குழாய் உடைந்து  வெளியேறிய சாயக்கழிவுநீர்; 13 சாய ஆலைகளின் இயக்கம் நிறுத்தம் 

ADDED : மார் 12, 2025 12:30 AM


Google News
திருப்பூர்; குழாய் உடைந்து சாயக்கழிவுநீர் வெளியேறியதால், மங்கலம் பொதுசுத்திகரிப்பு மையத்துக்கு உட்பட்ட, 13 சாய ஆலைகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில், 350 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் மூலம் இயங்குகின்றன. சாயக்கழிவுநீர், பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

கடந்த, 8ம் தேதி, மங்கலம் அருகே நொய்யலாற்றினுள் பதிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மைய குழாய்களில் 'மேன் ஹோல்' அருகே திடீர் உடைப்பு ஏற்பட்டது.

இதனால், சாய ஆலைகளிலிருந்து சுத்திகரிப்பு மையத்துக்கு அனுப்பப்பட்ட சாயக்கழிவுநீர் பீறிட்டு வெளியேறி, ஆற்றில் கலந்தது. இதுகுறித்து விவசாய அமைப்பினர் புகார் அளித்தனர். மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

சாய ஆலைகளிலிருந்து சுத்திகரிப்பு மையத்துக்கு கழிவுநீர் பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டது. பொது சுத்திகரிப்பு மையத்தினர், உடைந்த குழாய்களை மாற்றி, புதிய குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் கூறியதாவது:

அதிக அழுத்தம் அல்லது அடைப்பு காரணமாக, மங்கலம் பொது சுத்திகரிப்புமையம் - சாய ஆலை இடையிலான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், 13 சாய ஆலைகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொது சுத்திகரிப்பு மையத்தில், ஏற்கனவே தருவிக்கப்பட்ட சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மட்டும் நடைபெறுகிறது. சுத்திகரிப்பு மையத்திலிருந்து சாய ஆலைகளுக்கு 'பிரெய்ன் சொல்யூஷன்' அனுப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

உடைந்த குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்பு பணிகள் முடிவடைந்தபின், சுத்திகரிப்பு மையம் மற்றும் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்படும்.

அதன் பின்னரே, சாய ஆலைகள் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்படும். அனைத்து பொது சுத்திகரிப்பு மையங்களும், சாய ஆலை - சுத்திகரிப்பு மையம் இடையிலான குழாய்களை சரிபார்க்கவும், தேவைப்பட்டால் இயக்கத்தை நிறுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாயக்கழிவுநீர் செல்லும் மேன்ஹோல்களில் சுத்திகரிப்பு மைய பெயர், தொடர்பு எண் விவரங்களை எழுத வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us