/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதி சர்க்கரை ஆலையை முடக்க சதி? பராமரிப்பு நிதி ஒதுக்காததால் அதிருப்தி அமராவதி சர்க்கரை ஆலையை முடக்க சதி? பராமரிப்பு நிதி ஒதுக்காததால் அதிருப்தி
அமராவதி சர்க்கரை ஆலையை முடக்க சதி? பராமரிப்பு நிதி ஒதுக்காததால் அதிருப்தி
அமராவதி சர்க்கரை ஆலையை முடக்க சதி? பராமரிப்பு நிதி ஒதுக்காததால் அதிருப்தி
அமராவதி சர்க்கரை ஆலையை முடக்க சதி? பராமரிப்பு நிதி ஒதுக்காததால் அதிருப்தி
ADDED : ஜூன் 15, 2024 11:17 PM

உடுமலை;உடுமலை அருகேயுள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, தமிழகத்தில் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1961ம் ஆண்டில் துவக்கப்பட்டது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18 ஆயிரம் விவசாயிகள் ஆலை அங்கத்தினர்களாக உள்ளனர்.
இந்த சர்க்கரை ஆலை, ஆண்டுக்கு 10 மாதங்கள் இயக்கப்பட்டு, 4.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. பழமையான ஆலை இயந்திரங்கள் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், கடந்த சில ஆண்டுகளாக முழு அரவை மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு அரவை பருவத்தில், உரிய பராமரிப்பு இல்லாததால், அடிக்கடி இயந்திரங்கள் பழுதாகி, கரும்புகள் காய்ந்தும், பிழிதிறன் குறைந்தும், 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்பை தடுக்கும் வகையில், நடப்பாண்டு ஆலையை முழுமையாக புதுப்பிக்க, 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், நிதி ஒதுக்கவில்லை.
இதனால், நடப்பாண்டு கரும்பு அரவை முடங்கியது. ஆலை அரவைக்கு ஒப்பந்தமிட்டிருந்த, 55 ஆயிரம் டன் கரும்பு, மோகனுார் மற்றும் தனியார் ஆலைகளுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழி வகை கடனாக, 6.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகையால் முழுமையாக பராமரிப்பு செய்ய முடியாது. பிரதான இயந்திர பகுதிகளான, கரும்பு அரைக்கும் கட்டமைப்பு, கன்வேயர், கரும்பு சாறு, சர்க்கரை பதப்படுத்தும் பாய்லர்கள், குழாய்கள், உற்பத்தி துறையில் இருக்கும் சர்க்கரை அரவை இயந்திரங்களை புதுப்பிக்க, 80 கோடி ரூபாய் தேவை என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு நடப்பாண்டு நிதி ஒதுக்காததால், கரும்பு விவசாயிகள் பாதித்துள்ளனர். இந்த ஆலைக்கு நிதி ஒதுக்காததும், மற்ற ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்புவதும், அமராவதி சர்க்கரை ஆலையை நிரந்தரமாக மூட முயற்சி நடக்கிறதோ, என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரவீந்திரன், மா.கம்யூ., திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் மற்றும் விவசாயிகள் சர்க்கரைத்துறை ஆணையர் மற்றும் தமிழக முதல்வரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.