Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கனவைச் சுமக்கும் வயதில் கற்களைச் சுமக்கலாமா?

கனவைச் சுமக்கும் வயதில் கற்களைச் சுமக்கலாமா?

கனவைச் சுமக்கும் வயதில் கற்களைச் சுமக்கலாமா?

கனவைச் சுமக்கும் வயதில் கற்களைச் சுமக்கலாமா?

ADDED : ஜூன் 12, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் :

'கனவுகளைச் சுமக்க வேண்டிய வயதில்

கால் வயிற்று உணவுக்காக கற்களைச் சுமக்கிறேன்'

குழந்தைத் தொழிலாளி சொல்வதாக கூறப்படும் கவிதை வாசகம் இது.

தொழிற்சாலை நகரான திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த அவலம் முற்றிலும் களையப்பட வேண்டும்.

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து, திருப்பூரில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். அதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதன் அவசியத்தை உணர்த்தும்வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழிப்புணர்வு வாகனம் மூலம், பொது இடங்களில் பிரசாரம் செய்யப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது தொடர்பான துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் பேசினார்.

முன்னதாக, அரசு அலுவலர்கள் அனைவரும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ராஜசேகர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

---

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

2 ஆண்டு சிறைத்தண்டனை

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் 1986ன் படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த விதமான தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை, அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது.

மீறினால், நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனம், உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் குழந்தைகளை பணி அமர்த்தக்கூடாது.

-ஜெயக்குமார், உதவி கமிஷனர் (அமலாக்கம்),

மாவட்ட தொழிலாளர் துறை

----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us