/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பா.ஜ.,வினர் - போலீஸ் கைகலப்பு: திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு பா.ஜ.,வினர் - போலீஸ் கைகலப்பு: திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு
பா.ஜ.,வினர் - போலீஸ் கைகலப்பு: திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு
பா.ஜ.,வினர் - போலீஸ் கைகலப்பு: திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு
பா.ஜ.,வினர் - போலீஸ் கைகலப்பு: திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 23, 2024 01:36 AM

திருப்பூர்:திருப்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.,வினர் - போலீசார் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு எதிராக தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், குமரன் சிலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் திரண்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கட்சியினர் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்சியினரை அகற்ற முயன்ற போது, மாவட்ட நிர்வாகி ஒருவர் மீது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் தாக்கினர். நிர்வாகிகளும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், 33 பெண்கள் உட்பட, 284 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். கைதானவர் விபரங்களை போலீசார் பதிவு செய்தபோது ஜாதி குறித்து கேட்டதால் பா.ஜ.,வினர் ஆவேசமடைந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
போலீஸ் மீது திருட்டு புகார்
முன்னதாக ஆர்ப்பாட்டம் தொடர்பாக அச்சடிக்கப்பட்ட பேனரை எடுத்து கொண்டு கட்சியினர் டூவீலரில் வந்தபோது, பெண் போலீஸ் ஒருவர் அவர்களை தடுத்து பேனரை பறிமுதல் செய்தனர். மாவட்ட தலைவர் பேனரை திரும்ப கேட்டும் கொடுக்கவில்லை. பேனரை பறித்த போலீஸ் மீது திருட்டு புகார் மனு எழுதி உதவி கமிஷனர் அனில்குமாரிடம் கொடுத்தார். இதனால் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. வேறு பேனரை கட்சியினர் மீண்டும் கொண்டு வந்த பின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.,சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை வகித்தார். நகர தலைவர் கண்ணாயிரம், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட செயலாளர் வடுகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 15 பெண்கள், 190 ஆண்கள் என, 205 பேரை போலீசார் கைது செய்து, நகராட்சி திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.