ADDED : ஜூலை 29, 2024 11:16 PM

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், பொட்டிக்காம்பாளையம் கரியகாளியம்மன் கோவில் வழிபாட்டுக்குழுவினர், அளித்த மனு:
தாராபுரம் தாலுகா, முண்டுவேலம்பட்டி கிராமம், பல்லாக்கோவிலில், 300 ஆண்டு பழமையான கரியகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், தனியார் ஒருவர், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், முறைகேடாக நிதி வசூலித்து வருகிறார். பக்தர்களிடமிருந்து இதுவரை 15 கோடி ரூபாயை காணிக்கையாக பெற்று, அதில், 9 கோடி ரூபாயை மட்டும் கோவிலுக்காக செலவிட்டுள்ளனர்; மீதி தொகையை, சிலர் கூட்டாக பங்கிட்டுள்ளனர்.
கோவிலில் வசூலித்த பணத்தில், கோவில் எதிரே உள்ள நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். கோவிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள தென்னை மரங்களை வெட்டினார். இது தொடர்பாக குண்டடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவிலுக்கு சொந்தமான நிதி மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்துக் களையும் மீட்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.