/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாக்கு இயந்திரங்கள் மீது அனைவரின் விழிகளும்! வாக்கு இயந்திரங்கள் மீது அனைவரின் விழிகளும்!
வாக்கு இயந்திரங்கள் மீது அனைவரின் விழிகளும்!
வாக்கு இயந்திரங்கள் மீது அனைவரின் விழிகளும்!
வாக்கு இயந்திரங்கள் மீது அனைவரின் விழிகளும்!
ADDED : ஜூன் 05, 2024 12:30 AM

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மையத்தில் நேற்று, பரபரப்பாக நடந்தது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது திருப்பூர் லோக்சபா தொகுதி. அ.தி.மு.க., - அருணாச்சலம், இந்திய கம்யூ., - சுப்பராயன், பா.ஜ., - முருகானந்தம், நாம் தமிழர் - சீதாலட்சுமி உள்பட வேட்பாளர் 13 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் மொத்த வாக்காளர், 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர். இவர்களில், 5 லட்சத்து 66 ஆயிரத்து 970 ஆண்கள்; 5 லட்சத்து 68 ஆயிரத்து 204 பெண்கள்; 93 திருநங்கையர் என, 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 பேர் தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் 7,180 பேர் தபால் ஓட்டு பதிவு செய்தனர்; சர்வீஸ் வாக்காளர்களிடமிருந்து 92 ஆன்லைன் தபால் ஓட்டுகள் வந்து சேர்ந்தன.
திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மையத்தில் நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு, குலுக்கல் முறையில் ஓட்டு எண்ணும் பணியாளர்களுக்கு, டேபிள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. காலை, 6:30 மணி முதல், தலைமை முகவர்கள், முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வரத்துவங்கினர்.
பரிசோதனை தீவிரம்
நுழைவாயிலிலேயே, மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தியும், தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்துள்ளனரா என போலீசார், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள், முகவர்களை அனுமதித்தனர். பேனா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, தபால் ஓட்டு பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து வரப்பட்டன. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், தேர்தல் பார்வையாளர்கள் ஹிமான்சு குப்தா, ஓம்பிரகாஷ் மற்றும் முகவர்கள் முன்னிலையில், தபால் ஓட்டு பெட்டிகள் திறக்கப்பட்டன. காலை 8:00 மணிக்கு முதலில், தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
செல்லும் ஓட்டு; செல்லாத ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டன. சர்வீஸ் வாக்காளரின் ஆன்லைன் ஓட்டுகள், ஸ்கேன் செய்யப்பட்டு, உண்மை தன்மை சரிபார்க்கப்பட்டது. தகுதியான தபால் ஓட்டு சீட்டுகள் எண்ணிக்கைக்கு எடுக்கப்பட்டன.
ஏழு டேபிள்களில் தபால் ஓட்டுகளும்; ஒரு டேபிளில் சர்வீஸ் வாக்காளரின் தபால் ஓட்டுகளும் எண்ணப்பட்டன. வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்களுடன் 13 பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தந்த வேட்பாளருக்கான ஓட்டுகள், அந்தந்த பெட்டிகளில் வைக்கப்பட்டன. தலா 50 ஓட்டுச்சீட்டு கொண்ட பண்டல்கள் கட்டப்பட்டன. நிறைவாக, ஓட்டுகள் எண்ணிமுடிக்கப்பட்டன.
காலை, 8:30 மணிக்கு முதலில் அந்தியூர் சட்டசபை தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டது. அடுத்தடுத்து பவானி, பெருந்துறை, கோபி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டன.
ஸ்ட்ராங் ரூமிலிருந்து, கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் படிவங்கள் எடுத்து வரப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதிக்கான அரங்குகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான அரங்கிலும், 14 டேபிள்கள் வீதம், மொத்தம் 84 டேபிள்களில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும், 13 வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு எண்ணிக்கை விவரங்கள், மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி பெற்று, மைக்கில் அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு -18,வடக்கு - 28 சுற்று
18 சுற்றுகளுடன், திருப்பூர் தெற்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை முதலில் முடிவடைந்தது. அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கில் 28 சுற்றுக்களாக எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இறுதிச்சுற்று நிறைவடைந்ததும், தபால் ஓட்டுக்களை சேர்த்து, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த ஓட்டு விவரம் அறிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதலாக சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை முழுமையாக கண்காணிக்கப்பட்டது.