ADDED : ஜூன் 12, 2024 10:35 PM

பல்லடம் : பல்லடம் அருகே, நெடுஞ்சாலையில் கிடக்கும் மண் குவியல், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
பல்லடம் அடுத்த, கரடிவாவியில் கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த ரோட்டில், மண் குவியல் பரவிக் கிடக்கிறது. கரடிவாவி - காரணம்பேட்டை செல்லும் சாலையுடன், கொச்சி ரோடு இணையும் இடத்தில், நீண்ட துாரத்துக்கு மண் குவியல் ரோடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. சமீபத்தில், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக ரோட்டோரத்தில் இருந்த மண் அடித்து வரப்பட்டு, நெடுஞ்சாலையில் பரவி உள்ளது.
போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை என்பதுடன், காரணம்பேட்டை ரோட்டிலிருந்து கொச்சி நெடுஞ்சாலைக்கு திரும்பும் இடம் வளைவான பகுதி என்பதால், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயமடையும் வாய்ப்பு உள்ளது.
அருகே ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் படிக்கும் அரசு தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.