/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறு ஏமாற்றம் இருந்தாலும் வரவேற்கலாம்... பின்னலாடை தொழில் துறையினர் கருத்து சிறு ஏமாற்றம் இருந்தாலும் வரவேற்கலாம்... பின்னலாடை தொழில் துறையினர் கருத்து
சிறு ஏமாற்றம் இருந்தாலும் வரவேற்கலாம்... பின்னலாடை தொழில் துறையினர் கருத்து
சிறு ஏமாற்றம் இருந்தாலும் வரவேற்கலாம்... பின்னலாடை தொழில் துறையினர் கருத்து
சிறு ஏமாற்றம் இருந்தாலும் வரவேற்கலாம்... பின்னலாடை தொழில் துறையினர் கருத்து
ADDED : ஜூலை 24, 2024 01:53 AM

திருப்பூர்;மத்தியில் பட்ஜெட்டில், சிறு ஏமாற்றம் இருந்தாலும் கூட, வரவேற்பதாக திருப்பூர் தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு பட்ஜெட்டில் (2024-25), திருப்பூர் தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற வேண்டுமென எதிர்பார்த்தனர். பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு, தொழிலாளர் திறன் வளர்ப்பு, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பில், வாடகை அடிப்படையில் தங்குமிட வசதி போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
100 கிளஸ்டர்கள்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:
பி.எல்.ஐ., 2.0 திட்டம், 'ஏ-டப்' திட்டம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் வசதி, வாடகை அடிப்படையில் தங்கும் விடுதி வசதிகள் குறித்த அறிவிப்பை வரவேற்கிறோம். திறன் மேம்பாடு, குழந்தைகள் கல்வி மேம்பாட்டு அறிவிப்பும் உள்ளது. முத்ரா கடனாக, 20 லட்சம் ரூபாய் வரை வழங்கும் அறிவிப்பு பயனளிக்கும். 'கிரீன் எனர்ஜி' திட்டம், 60 கிளஸ்டர்களில் இருக்கிறது. அதனை, 100 கிளஸ்டர்களாக அதிகரிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஸ்கில் லோன்' திட்டம்
இறக்குமதி நிட்டிங் இயந்திர துணி உற்பத்தியாளர்கள் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன்:
குறு, சிறு தொழில்களுக்கு, 100 கோடி ரூபாய் வரையிலான, கடன் உத்தரவாத திட்டம்; நலிவடைந்த தொழில்களுக்கு கடனுதவி திட்டம், முத்ரா கடன் திட்டத்தில், 20 லட்சம் ரூபாய், தொழில் பூங்கா, புதிய பணியாளருக்கு, 15 ஆயிரம் முதல்மாத சம்பளம், மகளிருக்கு தங்கும் விடுதி, தனியார் பங்களிப்புடன் தொழிற்சாலை ஊழியருக்கு வாடகை வீடு திட்டம், புதிதாக 12 தொழில் பூங்கா, திறன்மேம்பாட்டுக்கு, 25ஆயிரம் ரூபாய் வரை 'ஸ்கில் லோன்' திட்டம், விவசாய ஊக்குவிப்பு திட்டங்களை வரவேற்கிறோம்.
ஏமாற்றம் அளிக்கிறது
திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர்கள் (நிட்டிங்) சங்க தலைவர் ரத்தினசாமி:
பிரதமர் அடிக்கல் நாட்டிய, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. முழுமையாக பார்த்த பின்னர் தான், அறிவிப்புகள் குறித்து தெரியவரும்.
வேலை வாய்ப்பு
திருப்பூர் 'நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:
புதிய தொழிலாளர்கள் வரும் போது, முதல் மாத சம்பளம், ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், 15 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் அறிவிப்பால், திருப்பூரின் ஒட்டுமொத்த தொழிலாளர் பற்றாக்குறை நிவர்த்தியாகும்.
நலிவடையும் சூழலில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, கடன் உத்தரவாத திட்டம் அறிவித்ததை வரவேற்கிறோம். இருப்பினும், வங்கிகள் அதிக கெடுபிடி செய்யாமல், எளிய முறையில் கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அறிவிப்பு இல்லை
திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம்:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தேவை முழுமையாக அரசுக்கு தெரியவில்லை. தெரிந்த அளவு சலுகை அறிவித்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டுக்கும் சலுகை வழங்கியுள்ளனர். நலிவு நிலையில் உள்ள, குறு,சிறு தொழில்களை காக்க சிறப்பு நிதி அறிவித்திருக்க வேண்டும். வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்தும் அறிவிப்பும் இல்லை. பருத்தி இறக்குமதி வரியும் நீக்கப்படவில்லை.
மகிழ்ச்சி அளிக்கிறது
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி:
பட்ஜெட்டி,ல், தனி நபர் வருமான வரி மூன்று லட்சம் என்பது உயர்த்தப்படாதது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும், 5 சதவீத வரிக்கு, ஆறு லட்சம் என்பதை ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்தியதை வரவேற்கிறோம். ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு, 4,417 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். குறிப்பாக, 'எலாஸ்டிக்' மற்றும் துணி உற்பத்திக்கான, செயற்கை நுால் இறக்குமதி வரி, 7.5 சதவீதம் என்பதை, 5 சதவீதமாக குறைந்துள்ளதை, மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
வரவேற்கிறோம்...
திருப்பூர் ரைசிங் சங்க தலைவர் ராமசாமி:
குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; மின் கட்டணம் உயர்ந்துள்ளது. பசுமை மானிய திட்டம் இடம்பெற்றுள்ளதா என்று தெரியவில்லை. இருப்பினும், குறு, சிறு தொழில்களுக்கான கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி; முறையாக செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் தங்குமிட வசதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
செலவு அதிகரிக்கும்
திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முகம்:
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு, வரியை உயர்த்தியுள்ளனர். இதுவரை, 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, 15 சதவீமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பாலிபேக் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி செலவு அதிகரிக்கும்; விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமும் ஏற்படும். பனியன் உற்பத்தியாளர்களுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தும்.